தூத்துக்குடியில் சமூக தணிக்கை குழுவிற்கான பயிற்சி முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டம் 30 மையங்களிலும், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் 25 மையங்களிலும் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.;
தமிழ்நாடு சமூக தணிக்கை அலகின் சார்பில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் மற்றும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் சமூகத் தணிக்கை குறித்த சமூக தணிக்கை வழி நடத்தும் குழுவினருக்கான பயிற்சி முகாம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நடந்தது.
தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் 443 மையங்களிலும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டம் 957 மையங்களில் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டம் 30 மையங்களிலும், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் 25 மையங்களிலும் நடைபெற உள்ளது.
இதில் மாணவர்களின் பெற்றோர்கள், மகளிர் சுயஉதவிகுழு உறுப்பினர்கள் உள்ளிட்ட சமூக தணிக்கை வழி நடத்தும் குழுவிற்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முகாமிற்கு சத்துணவு திட்ட மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் உலகநாதன் தலைமை வகித்து பயிற்சி முகாமை துவக்கி வைத்து பேசினார். தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர்கள் சத்தியவதி, வினோதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக தணிக்கை மாவட்ட வள பயிற்றுனர் மோகன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இதில் சத்துணவு திட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்லப்பாண்டி, சமூக தணிக்கை வட்டார வள பயிற்றுநர்கள் முத்து முருகன், கணேசமூர்த்தி, உச்சிமகாளி, முத்துச்செல்வி, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க வட்டார மேலாளர்கள் கனிராஜ், சுப்பையா உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டம் மற்றும் சமூக தணிக்கை குறித்து பயிற்சி அளித்தனர்.
இதில் சமூக தணிக்கை வட்டார வள பயிற்றுநர்கள் கருப்பசாமி, சிவகுமார், மாரிச்சாமி, சிவகுருநாதன், ஆறுமுகசாமி, ரமேஷ், ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் புதூர் ஒன்றிய சமூக தணிக்கை வட்டார வள பயிற்றுனர் பாலமுருகன் நன்றி கூறினார்.