எஸ்.சி., எஸ்.டி. தொகுதிகள் இடஒதுக்கீட்டை 10 ஆண்டுகள் நீட்டிக்கும் மத்திய அரசின் மசோதாவுக்கு மராட்டிய சட்டசபையில் ஒப்புதல்

எஸ்.சி., எஸ்.டி. தொகுதிகளுக்கான இடஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகள் நீட்டிக்க வகை செய்யும் மத்திய அரசின் அரசியலமைப்பு திருத்த மசோதாவுக்கு நேற்று மராட்டிய சட்டசபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Update: 2020-01-09 00:23 GMT
மும்பை, 

நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் கடந்த 70 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. தொகுதிகளுக்கான இடஒதுக்கீடு வருகிற 25-ந் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் அரசியலமைப்பு திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பர் 11-ந்தேதி நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டம் நடைமுறைக்கு வர வேண்டுமானால், குறைந்தபட்சம் 50 சதவீத மாநில சட்டமன்றங்களால் மசோதா அங்கீகரிக்கப்பட வேண்டும். இதன் காரணமாக மத்திய அரசு வருகிற 25-ந்தேதிக்குள் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு மராட்டிய அரசிடம் கேட்டுக்கொண்டு இருந்தது.

இது தொடர்பாக மராட்டிய சட்டசபையின் ஒரு நாள் சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. இதில் எஸ்.சி., எஸ்.டி. தொகுதிகளுக்கான இடஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகள் நீட்டிக்க வகை செய்யும் மத்திய அரசின் அரசியலமைப்பு திருத்த மசோதாவை ஆதரிக்கும் தீர்மானத்தை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தாக்கல் செய்தார். இந்த தீர்மானத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் ஆதரவு தெரிவித்தார்.

இதையடுத்து மத்திய அரசின் அரசியலமைப்பு திருத்த மசோதாவுக்கு சட்டசபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

முன்னதாக நடந்த சட்டசபையின் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி உரையாற்றினார்.

மேலும் செய்திகள்