இயேசுவின் ஓவியத்தை 2.75 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்ற டிரம்ப்

ஏலத்தில் கிடைத்த பணத்தின் ஒரு பகுதி குழந்தைகள் மருத்துவமனைக்கு வழங்கப்பட உள்ளது.;

Update:2026-01-01 16:58 IST

வாஷிங்டன்,

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பாம் பீச் பகுதியில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு சொந்தமான மார்-எ-லாகோ இல்லம் அமைந்துள்ளது. இங்கு புத்தாண்டு தினத்தையொட்டி டொனால்டு டிரம்ப் சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்தில் பல்வேறு தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விருந்து நிகழ்ச்சிக்கு டிரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் வருகை தந்தார். இந்த நிகழ்ச்சியின்போது பெண் ஓவியக் கலைஞர் வனேசா ஹோராபுனா என்பவர், ‘ஸ்பீட் பெயிண்டிங்’ முறையில் இயேசு கிறிஸ்துவின் ஓவியத்தை வரைந்தார். பின்னர் அந்த ஓவியம் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதிபர் டிரம்ப் மேடையில் ஏறி ஏலம் கேட்கத் தொடங்கினார். அந்த ஓவியத்தின் ஆரம்ப விலை ஒரு மில்லியன் டாலர் என்று அவர் அறிவித்தார். அங்கிருந்தவர்கள் 2 மில்லியன், 2.5 மில்லியன் டாலருக்கு ஏலம் கேட்டனர். இங்கு வந்திருப்பவர்களிடம் நிறைய பணம் இருக்கிறது என்று கிண்டலாக கூறிய டிரம்ப், இறுதியாக 2.75 மில்லியன் டாலர் என்ற விலையுடன் ஏலத்தை நிறைவு செய்தார்.

இதன்படி இயேசு ஓவியம் 2.75 மில்லியன் டாலருக்கு(இந்திய மதிப்பில் 24 கோடியே 75 லட்சம் ரூபாய்) விற்பனை செய்யப்பட்டது. அந்த பணத்தின் ஒரு பகுதி செயிண்ட் ஜூட் குழந்தைகள் மருத்துவமனைக்கும், மற்றொரு பகுதி உள்ளூர் ஷெரீப் அலுவலகத்திற்கும் பிரித்து அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்