ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, கடலூரில், பிரபல நகைக்கடையில் திருடிய ஊழியர் கைது - 97 பவுன் மீட்பு

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கடலூரில் பிரபல நகைக்கடையில் திருடிய ஊழியரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 97 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.

Update: 2020-01-09 23:00 GMT
கடலூர், 

கடலூர் சான்றோர்பாளையம் காந்திநகரை சேர்ந்தவர் தென்பாண்டியன். இவருடைய மகன் கலைச்செல்வம் (வயது 29). இவர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பிரபல நகைக்கடையில் நெக்லஸ் பிரிவில் கண்காணிப்பாளராக வேலை செய்து வருகிறார். இவர் தினந்தோறும் நெக்லஸ்களை கடை ஊழியர்களிடம் வழங்குவதும், பின்னர் வியாபாரம் முடிந்ததும், அதை சரிபார்த்து லாக்கரில் பாதுகாப்பாக வைப்பதும் வழக்கம்.

இந்நிலையில் இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு வரவில்லை. இதையடுத்து அவரது பிரிவில் உள்ள நகைகளை கடந்த 3-ந்தேதி கடை உரிமையாளர் சரிபார்த்த போது, அதில் பெரிய அளவில் முரண்பாடு இருந்தது. இதைத்தொடர்ந்து அவரது பிரிவை தணிக்கை செய்ததில், மொத்தம் 833.200 கிராம்(104 பவுன்) நகைகளை காணவில்லை. இதை கலைச்செல்வம் கொஞ்சம், கொஞ்சமாக திருடிச்சென்றது தெரிய வந்தது.

இது குறித்து நகைக்கடை உரிமையாளர் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலைச்செல்வத்தை தேடி வந்தனர். மேலும் அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் கடலூரில் பதுங்கி இருந்த கலைச்செல்வத்தை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அவர் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 97 பவுன் நகைகளை மீட்டனர். மேலும் 2 மோட்டார் சைக்கிள்கள், எல்.சி.டி. டி.வி. ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். முன்னதாக கலைச்செல்வம் போலீசாருக்கு அளித்த வாக்குமூலத்தில், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தான் வேலை பார்த்த நகைக்கடையில் 1 கிலோவுக்கு மேல் நகைகளை திருடி விட்டதாக தெரிவித்துள்ளார்.

இது பற்றி கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி நிருபர்களிடம் கூறுகையில், கலைச்செல்வம் கடந்த 6 ஆண்டுகளாக அந்த நகைக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இதில் கடந்த 1 வருடமாக விடுமுறை எடுக்காமல் வேலை செய்துள்ளார். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை அன்றும் வேலைக்கு வந்துள்ளார். இதனால் உரிமையாளருக்கு அவர் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி கடந்த 2 ஆண்டுகளாக கொஞ்சம், கொஞ்சமாக கலைச்செல்வம் நகைகளை திருடி, கடலூரில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் அடகு வைத்து பணத்தை பெற்றுள்ளார்.

வாங்கிய பணத்தை வைத்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துள்ளார். ஒரு நாளைக்கு தன்னுடைய நண்பர்களுக்கு மது வாங்கி கொடுப்பது போன்ற செலவுக்காக ரூ.10 ஆயிரம் வரை செலவு செய்துள்ளார். 2 மோட்டார் சைக்கிள்கள், விலை உயர்ந்த எல்.சி.டி. டி.வி. ஆகியவற்றையும் வாங்கி வைத்துள்ளார். இதையடுத்து சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தில் இருந்து 97 பவுன் நகைகளை மீட்டு இருக்கிறோம். 2 மோட்டார் சைக்கிள்கள், எல்.சி.டி. டி.வி. ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளோம். மீதியுள்ள நகைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளோம் என்றார். இதையடுத்து கைதான கலைச்செல்வத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் போலீசார் அடைத் தனர். 

மேலும் செய்திகள்