பிரதமர் மோடியை அவதூறாக பேசிய வழக்கில் நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் - கோர்ட்டு உத்தரவு

பிரதமர் மோடியை அவதூறாக பேசிய வழக்கில் நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்கி நெல்லை கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.

Update: 2020-01-10 23:00 GMT
நெல்லை, 

நெல்லை மேலப்பாளையத்தில் கடந்த 29-ந்தேதி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேச்சாளர் நெல்லை கண்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை மந்திரி அமித்‌ஷா ஆகியோரை அவதூறாக பேசியதாக, மேலப்பாளையம் போலீசில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் தயாசங்கர் புகார் செய்தார்.

அதன்பேரில், போலீசார் நெல்லை கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை பெரம்பலூரில் கைது செய்தனர். பின்னர் அவர் நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் கேட்டு நெல்லை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் வக்கீல் பிரம்மா மனுதாக்கல் செய்தார். இந்த மனு நேற்று நீதிபதி நசீர் அகமது முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மனுவை நீதிபதி விசாரித்து, நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். தினமும் காலையிலும், மாலையிலும் மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் நெல்லை கண்ணன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்