தக்கலை அருகே விபத்து மோட்டார் சைக்கிள் மோதி தலைமை ஆசிரியர் சாவு பிறந்த நாளன்று இறந்த பரிதாபம்

தக்கலை அருகே நடந்த விபத்தில், மோட்டார் சைக்கிள் மோதி, பிறந்த நாளன்று தலைமை ஆசிரியர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2020-03-01 00:00 GMT
பத்மநாபபுரம்,

தக்கலை அருகே முளகுமூடு கூனிமாவிளை பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டஸ் பிரவீன் (வயது 51). இவர் முளகுமூடு பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இவருடைய மனைவி அல்லி ஜெயராணி (48). இவர் குலசேகரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு பொர்பி என்ற மகளும், தர்ஷோன் என்ற மகனும் உள்ளனர். பொர்பி கல்லூரியிலும், தர்ஷோன் பிளஸ்-2 படித்து வருகிறார்கள்.

விபத்து

ஜஸ்டஸ் பிரவீன், மனைவி அல்லி ஜெயராணியுடன் முளகுமூடு பகுதியில் உள்ள ஆலயத்துக்கு சென்று விட்டு, மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

கூனிமாவிளை அருகே மோட்டார் சைக்கிள் சென்றது. அதே சமயம் அந்த வழியாக மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த ஜெபர்சன் (21) என்பவர் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தார். இரு மோட்டார் சைக்கிள்களும் மோதிக்கொண்டன. இதில் ஜஸ்டஸ் பிரவீன் படுகாயம் அடைந்தார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அல்லி ஜெயராணியும் காயம் அடைந்தார். அவர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

சாவு

திருவனந்தபுரம் ஆஸ்பத் திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் நேற்று ஜஸ்டஸ் பிரவீன் பரிதாபமாக இறந்தார்.

ஜஸ்டஸ் பிரவீனுக்கு நேற்று பிறந்த நாள் ஆகும். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் அவர் விபத்தில் சிக்கி இறந்தது, அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியது.

இந்த விபத்து குறித்து ஜெபர்சன் மீது தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்