விழுப்புரம், ஆதிவாலீஸ்வரர் கோவில் குளம் சீரமைக்கும் பணி - கலெக்டர் ஆய்வு

விழுப்புரத்தில் உள்ள ஆதிவாலீஸ்வரர் கோவில் குளம் சீரமைக்கும் பணியை கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2020-03-02 22:30 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் பழைய பஸ் நிலையம் ஆதிவாலீஸ்வரர் கோவில் அருகே குளம் உள்ளது. இந்த குளத்தில் அப்பகுதி மக்கள் மட்டுமின்றி நகரில் உள்ள பல்வேறு வர்த்தக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. இதனால் இந்த குளம் குப்பை கொட்டும் இடமாகவே மாறியது.

இந்த குளத்தை தூர்வாரி சீரமைத்து சுற்றிலும் நடைபாதை வசதியுடன் பூங்காவும் அமைக்க அரசால் ரூ.1 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் 26-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த குளத்தை சீரமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டி, பூமி பூஜையை தொடங்கி வைத்தார். இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் குளத்தை சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

இந்த பணிகளை நேற்று காலை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது குளத்தை சுற்றிலும் கான்கிரீட் போடப்பட்டு கட்டுமான பணிகள் நடந்து வந்ததை பார்வையிட்ட அவர், எவ்வளவு சிமெண்டு, ஜல்லிக்கற்கள் போடப்பட்டது என்றும் ஆய்வு செய்தார்.

அப்போது கான்கிரீட் தரமில்லாமல் இருப்பதை சுட்டிக்காட்டி, தரமான கட்டுமானத்திற்கு தேவையான அளவு சிமெண்டு, ஜல்லிக்கற்களை கலந்து பணிகளை விரைந்து முடிக்கும்படி உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்