திருப்பத்தூரில், ரியல் எஸ்டேட் நடத்தி ரூ.5 கோடி மோசடி - பாதிக்கப்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை

திருப்பத்தூரில் ரியல் எஸ்டேட் நடத்தி ரூ.5 கோடி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனுகொடுத்தனர்.

Update: 2020-03-03 22:45 GMT
திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்ட மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சிவன்அருள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, பட்டாமாறுதல், தெருவிளக்கு, கால்வாய், தார் ரோடு வசதி, விபத்து ந‌‌ஷ்ட ஈடு, கல்வி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை என பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 400 -க்கும் மேற்பட்ட மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. இவற்றின் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் திருப்பத்தூர், தர்மபுரி, கிரு‌‌ஷ்ணகிரி, சித்தூர் மாவட்டங்கள் மற்றும் குப்பம் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

திருப்பத்தூரை சேர்ந்த நிலம் வாங்கி விற்பனை செய்யும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் எங்களை அணுகி எங்கள் நிறுவனத்தில் 5 முதல் 10 ஆண்டுகள் வரை தவணை திட்டம் மற்றும் வைப்பு நிதி திட்டத்தில் பணம் டெபாசிட் செலுத்தினால், முதிர்வு காலம் முடிந்த பிறகு அதற்குரிய வட்டியுடன் சேர்த்து தருவதாக கூறி ரூ.5 கோடிக்கு மேல் வசூல் செய்துவிட்டனர். பலமுறை நாங்கள் கேட்ட போது ரியல் எஸ்டேட், அகர்பத்தி, கயிறு, பாக்குமட்டை கம்பெனிகளில் முதலீடு செய்துள்ளதாகவும், மாதம் பல லட்சம் லாபம் வருவதாகவும், அதனை பிரித்துத்தருவதாகவும் கூறி ஏமாற்றி விட்டு, தகாத வார்த்தையில் பேசி, அடியாட்களை வைத்து மிரட்டி அடிக்கிறார்கள். எனவே எங்கள் பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

அதேபோன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ்சூப்பிரண்டு விஜயக்குமாரிடமும் கோரிக்கைமனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

மூக்கனூர் ஊராட்சியில் அடியத்தூர் ஏரிகோடி செல்லும் நீரோடையை ஆக்கிரமிப்பு செய்து ரோடு போடுகிறார்கள், இதனால் 100 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்படையும், எனவே உடனடியாக நீரோடையை ஆக்கிரமித்து தார் சாலை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் மனு கொடுத்தனர்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா பாண்டியன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் அருண், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்