அதகப்பாடி துணை மின் நிலையத்தில் ரூ.1½ லட்சம் மின் கம்பி திருட்டு 3 வாலிபர்கள் கைது

இண்டூர் அருகே அதகப்பாடி துணை மின் நிைலயத்தில் ரூ.1½ லட்சம் மதிப்பிலான மின் கம்பிகள் திருடிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். சரக்கு வேன் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2020-03-07 22:30 GMT
பாப்பாரப்பட்டி,

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே அதகப்பாடி துணை மின் நிலையத்தில் வைத்திருந்த ரூ.1½ லட்சம் மதிப்பிலான மின் கம்பிகள் நேற்று முன்தினம் திருட்டு போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த உதவி பொறியாளர் முரளி இதுகுறித்து இண்டூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மாட்லாம்பட்டி பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை நடத்தியபோது அதில் மின் கம்பிகள் இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக சரக்கு வேனில் வந்த 3 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

3 வாலிபர்கள் கைது

அப்போது அவர்கள் தர்மபுரி முக்கல்நாயக்கன்பட்டியை சேர்ந்த சின்னசாமி (வயது29), பென்னாகரம் அருகே உள்ள தின்னப்பட்டியை சேர்ந்த விஜயகுமார் (22), ராஜி(22) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் நண்பர்கள் 2 பேருடன்அதகப்பாடி துணை மின் நிலையத்தில் மின் கம்பிகளை திருடி வந்ததும், நண்பர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வேன் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.1½ லட்சம் மதிப்பிலான மின் கம்பிகள் மீட்கப்பட்டன. தப்பியோடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்