வங்கிகளில் பணத்தை எடுக்க முஸ்லிம்கள் திரண்டதால் பரபரப்பு

கறம்பக்குடியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக 22-வது நாளாக போராட்டத்தில் பணத்தை எடுக்க வங்கிகளில் முஸ்லிம்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-03-11 22:15 GMT
கறம்பக்குடி, 

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் குடிமக்கள் பாதுகாப்பு கூட்டமைப்பினர் சார்பில், குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த மாதம் 19-ந்தேதி முதல் தொடர்போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்திற்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நேற்று 22-வது நாளாக போராட்டம் காலையில் தொடங்கியது. புளியஞ்சோலை பள்ளிவாசல் அருகே அமைக்கப்பட்டிருந்த திடலில் திரண்ட முஸ்லிம்கள் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக கோ‌‌ஷம் எழுப்பினர். இதைத்தொடர்ந்து இந்திய பொருளாதாரம் சீரழிந்து இருப்பதாகவும், வங்கிகள் திவாலாகும் நிலை ஏற்பட்டுள்ளதால் வங்கிகளில் இருந்து பணத்தை எடுக்கும் போராட்டத்தை நடத்த இருப்பதாகவும் போராட்டக்குழு நிர்வாகிகள் அறிவித்தனர்.

இதைத்தொடர்ந்து நூற்றுக்கணக்கான பெண்கள் உள்பட திரளான முஸ்லிம்கள் வங்கி சேமிப்பு கணக்கு புத்தகங்களுடன் ஊர்வலமாக சென்றனர். பின்னர் அவர்கள் கணக்கு வைத்திருந்த 2 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் முன்பு திரண்டு நின்றனர். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் வங்கிகளில் கடும் நெருக்கடி ஏற்பட்டது. வங்கிக்கு வெளியேயும் பலர் கூட்டமாக நின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பணம் எடுக்க ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் வங்கிக்கு வந்ததால் ஊழியர்கள் திணறினர். பணம் எடுக்கும் போராட்டத்தையொட்டி கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்