வடபழனி முருகன் கோவிலில் பாலாலய பூஜை குடமுழுக்குக்கான திருப்பணிகள் தொடக்கம்

வடபழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு நடத்துவதற்கான பாலாலய பிரதிஷ்டை பூஜை நேற்று நடந்ததை தொடர்ந்து திருப்பணிகள் தொடங்கின.

Update: 2020-03-12 23:00 GMT
சென்னை, 

சென்னையில் உள்ள பிரசித்த பெற்ற முருகன் கோவில்களில் ஒன்று வடபழனி முருகன் கோவில். தென்பழனியில் பழனியாண்டியாகவும், சென்னையில் வடபழனியாண்டியாகவும், வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை அளித்து கலியுக வரதனாகவும் முருகப்பெருமான் எழுந்தருளி உள்ளார்.

இநத கோவிலில் குடமுழுக்குக்கான திருப்பணி தொடங்க ஏதுவாக மூலவர் வடபழனி முருகன் சன்னதி நீங்கலாக, அனைத்து சன்னதிகள் மற்றும் ராஜகோபுரங்களுக்கான பாலாலய பூஜை திருப்பணி செய்ய உள்ள ஸ்தபதி, திருப்பணி உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் நேற்று நடந்தது.

பாலாலய பிரதிஷ்டை

குறிப்பாக நேற்று காலை 8 மணி முதல் 9.15 மணி அளவில் பாலாலய பூஜைகள் வடபழனி முருகன் அருளால் நடைபெற்றது. காலை 8 மணிக்கு பூஜைகள் தொடங்கி, 8.30 மணிக்கு பாலாலய பிரதிஷ்டையும், கலச புறப்பாடு நிகழ்ச்சியும் நடந்தது. காலை 9.15 மணிக்கு திருப்பணிகள் தொடங்கியது. பாலாலயத்தை பக்தர்கள் பார்வையிடுவதற்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் அறநிலையத்துறை கமிஷனர் க.பணிந்திர ரெட்டி, போலீஸ் ஐ.ஜி. சி.ஸ்ரீதர், மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பி.கே.அசோக்பாபு, விசுவ இந்து பரிஷத்தின் மூத்த தலைவர் வேதாந்தம், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி, கண்ணப்ப சிவாச்சாரியார் உள்பட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கோவில் தக்கார் எல். ஆதிமூலம் மற்றும் கோவில் செயல் அலுவலர் சித்ரா தேவி உள்ளிட்டோர் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்