விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட மாட்டாது ; எச்.ராஜா உறுதி

மின்துறையை தனியார்மயமாக்குவதன் மூலம் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் நிறுத்தப்படாது. அதை மத்திய அரசு அனுமதிக்காது என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-06 00:25 GMT
புதுச்சேரி,

புதுச்சேரிக்கு நேற்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. 2-வது முறையாக ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகிறது. கடந்த 5 ஆண்டுகளில் வரலாற்று சிறப்புமிக்க சாதனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனால்தான் கொரோனா தொற்று பரவிய காலத்திலும் நம்மால் சமாளிக்க முடிகிறது.

உலகில் 184 நாடுகள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சினையை அரசியலாக்க சிலர் தூண்டுகிறார்கள். அதற்கு சோனியா காந்தி, மு.க.ஸ்டாலின் போன்றவர்கள் துணை போகலாமா? மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு அவர்கள் உதவிட வேண்டும்.

புதுச்சேரியில் மத்திய அரசின் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. ரேஷன் கடைகளில் மத்திய அரசின் நிவாரணப் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படவில்லை. மத்திய அரசு கொரோனாவுக்காக வழங்கிய நிதியில் 15 சதவீதத்தை கூட அரசு செலவிடவில்லை.

மத்திய அரசு தமிழக மக்களுக்கு நேரடி மானியம் மூலம் ரூ.3,700 கோடி வழங்கியுள்ளது. மின்துறை தனியார்மயமாக்கப்பட்டால் மின் திருட்டு தடுக்கப்படும். தற்போது பல மாநிலங்களில் 15 சதவீதம் அளவுக்கு மின் இழப்பு உள்ளது. தனியார்மயமாக்குவதன் மூலம் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் நிறுத்தப்படாது. அதை மத்திய அரசு அனுமதிக்காது.

இவ்வாறு எச்.ராஜா கூறினார்.

இதன்பின் பா.ஜ.க.வினருடன் எச்.ராஜா ஆலோசனை நடத்தினர். இதில் மாநிலத் தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., நிர்வாகிகள் தங்க விக்ரமன், ஏம்பலம் செல்வம், ரவிச்சந்திரன், சாய் ஜெ.சரவணகுமார், வி.சி.சி. நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்