போலீஸ்காரரை வெட்டியவர் மர்மச்சாவு: உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு - களஆய்வுக்கு வந்த 5 வக்கீல்களுக்கு கொரோனா பரிசோதனை

போலீஸ்காரரை வெட்டியவர் மர்மமான முறையில் இறந்தார். அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டனர். களஆய்வுக்கு சென்னையில் இருந்து வந்த 5 வக்கீல்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

Update: 2020-06-11 22:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள கல்லணைக்கால்வாய் பாலத்தில் கடந்த 7-ந் தேதி நின்று கொண்டிருந்த டாக்டர் தம்பதியினரை சிலர் தாக்கிவிட்டு 11 பவுன் சங்கிலி, ரூ.1¼ லட்சத்தை பறித்து சென்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்காக மனோஜிப்பட்டி அன்னை சிவகாமி நகருக்கு தனிப்படை போலீசார் சென்றனர்.

அப்போது ஒரு வீட்டில் இருந்த 4 பேரை போலீசார் பிடிக்க முயன்றனர். அவர்களில் 2 பேர் தப்பிச்சென்று விட்டனர். மற்ற 2 பேரை பிடித்தபோது அதில் ஒருவர், போலீஸ்காரர் கவுதமனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்று விட்டார். இந்த நிலையில் போலீசாரை அரிவாளால் வெட்டிய மானோஜிப்பட்டி பொதிகை நகரை சேர்ந்த மணி(வயது 48), ரெட்டிப்பாளையம் கிராமத்தில் உள்ள பேய்வாரி வாய்க்காலில் உள்ள ஒரு மரத்தில் கைலியால் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதை அறிந்த கள்ளப்பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். ஆனால் மணியின் உடலை எடுத்து செல்ல அனுமதிக்காமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வருவாய்த்துறையினர் அவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மணியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நேற்று மணியின் உடல் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மணியின் உறவினர்கள், உடலை வாங்குவதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டு பிரேத பரிசோதனைக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இந்த நிலையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தேசிய குறிஞ்சியர் சமூக நீதி பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மானோஜிப்பட்டிக்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.

இது குறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைத் தலைவர் சின்னை.பாண்டியன் கூறும்போது, போலீசார் மீது கொலை மற்றும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை மணியின் உடலை வாங்க மாட்டோம் என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளிடம் மனு அளிக்க தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மணியின் உறவினர்கள், பல்வேறு அமைப்பினர் என 100-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை திரண்டனர். இதனால் போலீசாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சென்னையில் இருந்து வக்கீல்கள் 5 பேர், இந்த பிரச்சினை தொடர்பாக களஆய்வு நடத்துவதற்காக தஞ்சைக்கு வந்தனர். இதை அறிந்த போலீசார், அவர்கள் 5 பேரையும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி வலியுறுத்தினர். இதையடுத்து 5 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இறந்த மணிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாக தகவல் வந்தது. ஆனால் அப்படி எந்த பரிசோதனையும் மேற்கொள்ளவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்