விவசாயி கொலை வழக்கில் அண்ணன்-தம்பி, தங்கைக்கு ஆயுள் தண்டனை திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு

விவசாயி கொலை வழக்கில் அண்ணன் - தம்பி, தங்கைக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2020-07-04 00:25 GMT
போளூர், 

விவசாயி கொலை வழக்கில் அண்ணன் - தம்பி, தங்கைக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

விவசாயி கொலை

போளூரை அடுத்த தேவிகாபுரம் பழைய காலனியை சேர்ந்தவர் ராமு (வயது 58), விவசாயி. இவரது வீட்டின் எதிர் வீட்டில் வசித்தவர் ஜெயவேல், விவசாயி. இவரது வீட்டின் கழிவுநீர் ராமு வீட்டுக்கு சென்றது. இதனாலும், மேலும் சில காரணங்களாலும் இருதரப்பினருக்கு இடையே முன்விரோதம் இருந்தது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 4-ந்தேதி அன்று அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ஜெயவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து ராமுவை உருட்டு கட்டையாலும், இரும்பு கம்பியாலும் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த ராமு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

3 பேருக்கு ஆயுள் தண்டனை

இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயவேல், அவரது மனைவி எல்லம்மாள், மகள் பரிமளா (30). மகன்கள் முனியப்பன் (48), கந்தன் என்கிற கண்ணதாசன் (35), முனியப்பனின் மனைவி ஜெயந்தி ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

இந்த கொலை வழக்கு திருவண்ணாமலை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு நடைபெற்று வந்த காலத்தில் ஜெயவேல் இறந்துவிட்டார்.

இந்த வழக்கில் நீதிபதி திருமகள் தீர்ப்பு கூறினார். அதில் முனியப்பன், கந்தன் என்கிற கண்ணதாசன், பரிமளா ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், எல்லம்மாள், ஜெயந்தி ஆகிய 2 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்