மின்சாரம் தாக்கி இறந்த மயிலுக்கு தேசிய கொடி போர்த்தி மரியாதை செலுத்திய போலீசார் கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்

கோவையில் மின்சாரம் தாக்கி இறந்த மயிலுக்கு போலீசார் தேசிய கொடி போர்த்தி மரியாதை செலுத்தினார்கள்.

Update: 2020-07-04 22:57 GMT
கோவை,


கோவையில் நடந்த இந்த நெகிழ்ச்சி சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

மயில் இறந்தது

கோவை திருச்சி ரோட்டில் இருந்து எஸ்.ஐ.எச்.எஸ். காலனிக்கு செல்லும் வழியில் ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. இந்த பகுதியில் நேற்று ஒரு மயில் பறந்து வந்தது. அந்த மயில் அங்கிருந்த ஒரு டிரான்ஸ்பார்மரில் உள்ள உயர் அழுத்த மின் கம்பியில் அமர்ந்தது. அப்போது திடீரென்று அந்த மயில் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் அந்த மயில் கருகி இறந்தது. இதனால் அந்த மின்கம்பியிலேயே மயிலின் உடல் தொங்கியது. இது குறித்து தகவல் அறிந்த அந்தப்பகுதியை சேர்ந்த பலர் அங்கு கூடினார்கள்.

பின்னர் இது குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜூன் குமார் மற்றும் தலைமை காவலர் சுகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் மின்வாரிய ஊழியர்களும் அங்கு வரவழைக்கப்பட்டனர்.

தேசிய கொடி

பின்னர் டிரான்ஸ்பார்மரை ஆப் செய்து அங்கு தொங்கிய மயிலின் உடல் மீட்கப்பட்டது. இறந்தது பெண் மயில் ஆகும். அதற்கு 3 வயது இருக்கும். மயில் தேசிய பறவை என்பதால் இறந்த மயிலின் உடல் மீது போலீசார் தேசிய கொடியை போர்த்தி அதற்கு உரிய மரியாதை செலுத்தினார்கள்.

அதைத்தொடர்ந்து அந்த மயில் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அந்த மயில் வனப்பகுதியில் புதைக்கப்பட்டது. கோவையில் மின்சாரம் தாக்கி இறந்த மயிலுக்கு போலீசார் தேசிய கொடியை போர்த்தி மரியாதை செலுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்