லாரி மோதி ஆட்டோ டிரைவர் பலியான சம்பவத்தில் திடீர் திருப்பம்: லாரி சக்கரத்தில் தானே விழுந்து தற்கொலை செய்து கொண்டது அம்பலம்

லாரி மோதி ஆட்டோ டிரைவர் பலியான சம்பவத்தில் திடீர் திருப்பமாக அவரே லாரி சக்கரத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் அம்பலமாகி உள்ளது.

Update: 2020-07-16 00:28 GMT
பூந்தமல்லி, 

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் மேத்தா நகரைச் சேர்ந்தவர் ராஜி (வயது 70). ஆட்டோ டிரைவரான இவர், நேற்று முன்தினம் டீ குடிப்பதற்காக குன்றத்தூர்-அனகாபுத்தூர் சாலையை கடக்க முயன்றதாகவும், அப்போது அந்த வழியாக வந்த லாரி மோதி ராஜி, அதே இடத்தில் பரிதாபமாக இறந்ததாகவும் கூறப்பட்டது.

இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து நடந்தது எப்படி? என அங்கு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

சம்பவத்தன்று சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருக் கும் ராஜி, அங்கும், இங்குமாக நடந்தபடி இருக்கிறார். அப்போது அந்த வழியாக 16 சக்கரங்கள் கொண்ட லாரி வருகிறது. அதை கண்ட ராஜி, வேகமாக லாரியின் அருகில் செல்கிறார். திடீரென அவர் லாரியின் பின்பக்க சக்கரங்களுக்கு இடையே தானாக போய் படுத்து கொள்கிறார். அவர் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் அதே இடத்தில் பலியானார்.

ஆனால் இதை கவனிக்காத அந்த பகுதி மக்கள், லாரி மோதி ராஜி இறந்ததாக தெரிவித்துவிட்டனர். தற்போது விபத்து வழக்காக பதிவு செய்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், இந்த வழக்கை குன்றத்தூர் போலீசாருக்கு மாற்ற உள்ளனர்.

ஆட்டோ டிரைவரான ராஜி, கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமா? என்பது குறித்து விசாரணைக்கு பின்னர் முழுமையாக தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். லாரி சக்கரத்தில் விழுந்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்