தந்தை-மகன் உடலை பிரேத பரிசோதனை செய்த நெல்லை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் விசாரணை - மனித உரிமை ஆணையம் நடவடிக்கை

சாத்தான்குளம் தந்தை, மகன் உடல்களை பிரேத பரிசோதனை செய்த நெல்லை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் மனித உரிமை ஆணையம் நேற்று விசாரணை நடத்தியது.

Update: 2020-07-17 22:15 GMT
நெல்லை, 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இதற்காக மனித உரிமை ஆணைய துணை சூப்பிரண்டு குமார் கடந்த 14-ந் தேதி சாத்தான்குளத்துக்கு சென்று ஜெயராஜின் குடும்பத்தினர், நண்பர்கள், போலீஸ் ஏட்டு ரேவதி ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். பின்னர் தூத்துக்குடி சுற்றுலா மாளிகையில் இந்த ஆணையத்தின் விசாரணை தொடர்ந்தது.

அப்போது, 2 பேருக்கும் சிகிச்சை அளித்த அரசு டாக்டர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், கோவில்பட்டி ஜெயில் சூப்பிரண்டு ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் கோவில்பட்டி கிளை சிறையில் இருந்து தந்தை-மகனை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற சிறைக்காவலர்களிடம் ஆணைய அதிகாரி குமார் விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில் நேற்று 4-வது நாளாக அவரது விசாரணை தொடர்ந்தது. இதற்காக அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கு ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்களிடம் அவர் விசாரணை நடத்தினார்.

செல்வமுருகன், பிரசன்னா, சுதன் ஆகிய 3 அரசு டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். அவர்கள் 3 பேரிடமும் துணை சூப்பிரண்டு குமார் விசாரணை மேற்கொண்டார். அவர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரிக்கப்பட்டது. இந்த விசாரணை சுமார் 3 மணி நேரம் நடந்தது. அவர்கள் கொடுத்த தகவல்களை அவர் பதிவு செய்து கொண்டார். பின்னர் ஆணைய அதிகாரி குமார் தூத்துக்குடி சுற்றுலா மாளிகைக்கு புறப்பட்டு சென்றார்.

மேலும் செய்திகள்