மாவட்டத்தில் கொரோனா கோரத்தாண்டவம்: 24 நாட்களில் 2,878 பேருக்கு பாதிப்பு - அதிகரிக்க காரணம் என்ன?

தேனி மாவட்டத்தில் கொரோனா வைரசின் கோரத்தாண்டவத்தால் 24 நாட்களில் 2, 878 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.;

Update:2020-07-26 04:00 IST
தேனி,

உலகை அச்சுறுத்தி உள்ள கொடிய வைரஸ் கொரோனா. கடந்த மார்ச் மாத கால கட்டத்தில் தேனியில் கொரோனா பரவல் ஏற்பட்டது. ஏப்ரல் 17-ந்தேதிக்கு பிறகு புதிய தொற்று ஏற்படாத நிலை இருந்தது. ஏப்ரல் மாதம் இறுதி நிலவரப்படி 43 பேருக்கு பாதிப்பு உறுதியாகி இருந்தது. அதில் 2 பேர் பலியாகி இருந்தனர்.

மே 1-ந்தேதி நிலவரப்படி சிகிச்சையில் இருந்த அனைவரும் குணமாகி வீடு திரும்பினர். இதனால், கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக தேனி உருவானது. ஆனால், அந்த மகிழ்ச்சி ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் மூலம் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்தது. சோதனை சாவடிகளில் போலீசாரின் கண்ணில் சிக்காமல் மாற்றுப்பாதைகளில் பலரும் வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களிலும் இருந்து தேனிக்கு வந்தனர். இதனால், வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கியது.

ஜூன் 1-ந்தேதி நிலவரப்படி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 114 ஆக இருந்தது. அதன்பின்னர், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மண்டலம் வாரியாக தமிழகம் பிரிக்கப்பட்டு மண்டலத்துக்குள் பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால், சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் இருந்து தேனிக்கு வந்த பலரும் மதுரை, வத்தலக்குண்டு வரை பிற வாகனங்களில் வந்து விட்டு, அங்கிருந்து பஸ்களில் சொந்த ஊருக்கு திரும்பினர். இதுபோன்ற நபர்களுக்கு சோதனை சாவடிகளில் பரிசோதனை செய்யப்படவில்லை.

இதனால், மாவட்டத்தில் கொரோனா பரவல் வேகம் எடுத்தது. ஜூலை மாதம் 1-ந்தேதி நிலவரப்படி மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 760 ஆக அதிகரித்தது. அதன்பிறகு நாளுக்கு நாள் கொரோனா வைரசின் கோரத்தாண்டவம் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால், நேற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 638 ஆக அதிகரித்தது. கடந்த 24 நாட்களில் மட்டும் 2 ஆயிரத்து 878 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. அத்துடன் உயிரிழப்பும் 70-ஐ தொட்டு விட்டது.

மக்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் உலா வருவது கொரோனா பரவலுக்கு முக்கிய காரணமாக உள்ளது. அத்துடன் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் கம்புகள் வைத்து பாதைகள் அடைக்கப்பட்ட போதிலும், கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு வெளியே சென்று வருகின்றனர். கட்டுப்பாட்டு பகுதிகளில் ரேஷன் பொருட்கள் கூட வீடு தேடி வழங்கப்படுவது இல்லை.

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களும் தங்களுக்கான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கட்டுப்பாட்டு பகுதிகளை விட்டு வெளியே சென்று வருகின்றனர். இதனால், வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இது மக்களிடமும், தடுப்பு பணிகளில் ஈடுபடும் அரசு துறை அலுவலர்களிடமும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்