சென்னையில் இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு: வெறிச்சோடிய சாலைகள்!

கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

Update: 2020-07-26 08:26 GMT
சென்னை,

கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட 6-ம் கட்ட ஊரடங்கு தற்போது அமலில் இருக்கிறது. மக்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. 6-ம் கட்ட ஊரடங்கு வருகிற 31-ந்தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க இன்று அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் முழு ஆதரவு அளித்து வருகின்றனர். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முழு ஊரடங்கால் பால்நிலையங்கள், மருந்தகங்கள் தவிர்த்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. அனைத்து சாலைகளும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. சாலைகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது

சென்னையில் 6ஆவது ஞாயிற்றுக்கிழமையாக முழு ஊரடங்கு இன்று அமல்படுத்தப்பட்டுள்ளதால் அனைத்து சாலைகளும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. 

அண்ணா சாலை , பூந்தமல்லி நெடுஞ்சாலை , ஜிஎஸ்டி சாலை , மெரினா காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.

தேவையின்றி வாகனங்களில் சுற்றுபவர்களை கண்காணிக்க, 288 இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. உத்தரவை மீறுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்வதோடு, அவர்களிடம் இருந்து போலீசார் அபராதம் வசூலிக்கின்றனர்.

மேலும் செய்திகள்