முதியவர் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை

முதியவர் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது

Update: 2021-09-30 20:17 GMT
திருச்சி
திருச்சி-திண்டுக்கல் மெயின் ரோட்டில் பிராட்டியூர் டீக் கடை அருகில் கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 26-ந் தேதி இரவு ராம்ஜி நகரை சேர்ந்த மாமலைவாசன் என்பவரின் ஆதரவாளர்கள் சங்கர், சந்தோஷ் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி சரக்கு வாகனம், மோட்டார் சைக்கிளை உரசுவதுபோல சென்றது. இதுதொடர்பாக மினி சரக்கு வாகன டிரைவருடன் இருவரும் தகராறில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக மாமலைவாசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 5 பேர் பிராட்டியூர் அருகே டிபன் கடை நடத்தி வரும் மினிசரக்கு வாகனம் ஓட்டியவரின் ஆதரவாளரான ராம்ஜிநகரை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 35) என்பவரை தாக்கி, டிபன் கடையையும், கார் ஒன்றையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதில், காயம் அடைந்த ராஜேந்திரன் கொடுத்த புகாரின்பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர்.
முதியவர் வெட்டிக்கொலை
ஆனாலும், காயம் அடைந்த ராஜேந்திரனின் தம்பி ராஜமாணிக்கத்திற்கு அண்ணனையும், டிபன் கடையையும் சூறையாடியதை தாங்க முடியவில்லை. இந்த விரோதம் பகையாக மாறியது. இந்தநிலையில், ராஜமாணிக்கம்(28) தனது ஆதரவாளர்கள் ராம்ஜிநகரை சேர்ந்த சங்கர்(24), தர்மா என்ற தர்மராஜ் (23), மோகன் என்ற நீலமேகம்(25), சம்பத் என்ற சம்பத்குமார் (26), மயிலாடுதுறையை சேர்ந்த வடிவேல்(31), மணிவேல்(28), பிரபு (24), மோகன்ராஜ் (24) மற்றும் ஜம்புலிங்கம் ஆகியோர் ஒன்று கூடி மாமலைவாசனின் ஆதரவாளர்களை பழிதீர்க்க திட்டம் தீட்டினர். அதன்படி, 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ந் தேதி பெரியகொத்தமங்கலம் பொதுக்குளம் அருகில் மாமலைவாசனின் ஆதரவாளர்களான ராம்ஜிநகர் ஹரிபாஸ்கர் காலனியை சேர்ந்த சுப்பன் என்ற பாலசுப்பிரமணியன் (60), ராம்ஜி நகர் காந்திநகரை சேர்ந்த ஆறுமுகம் (46) ஆகியோர் வந்து கொண்டிருந்தனர். அப்போது ராஜமாணிக்கம் தனது ஆதரவாளர்கள் 10 பேருடன் அங்கு அரிவாள், கட்டைகளுடன் வந்து இருவரையும் சரமாரியாக தாக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே முதியவரான பாலசுப்பிரமணியன் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். ஆறுமுகம் வெட்டு காயங்களுடன் உயிர் தப்பினார்.
10 பேருக்கு ஆயுள் தண்டனை
இந்த கொலை வழக்கு தொடர்பாக திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 பேரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருச்சி 3-வது கூடுதல் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்தநிலையில் கொலை வழக்கு தொடர்பான விசாரணை முடிக்கப்பட்டு நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
பாலசுப்பிரமணியனை கொலை செய்தது நிரூபிக்கப்பட்டதால், ராம்ஜிநகரை சேர்ந்த ராஜமாணிக்கம், அவரது ஆதரவாளர்கள் சங்கர், தர்மா என்ற தர்மராஜ், மோகன் என்ற நீலமேகம், சம்பத் என்ற சம்பத்குமார், வடிவேல், மணிவேல், பிரபு, மோகன்ராஜ் மற்றும் ஜம்புலிங்கம் ஆகிய 10 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி தங்கவேல் தீர்ப்பளித்தார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தும் உத்தரவிடப்பட்டது.
மேலும் ஆறுமுகத்தை கொல்ல முயன்ற குற்றத்திற்காக தனியாக ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்