கோபி அருகே பரபரப்பு ஊராட்சி தலைவரை கண்டித்து வார்டு உறுப்பினர்கள் தர்ணா போராட்டம்

கோபி அருகே ஊராட்சி தலைவரை கண்டித்து வார்டு உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2021-10-01 02:40 IST
கடத்தூர்
கோபி அருகே ஊராட்சி தலைவரை கண்டித்து வார்டு உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
தர்ணா
கோபி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சி அயலூர். இந்த ஊராட்சியின் தலைவராக ரங்கன் என்பவரும், துணைத்தலைவராக வேதநாயகியும் உள்ளனர்.  இதேபோல் மொத்தம் உள்ள 9 வார்டுகளின் உறுப்பினர்களாக பாலசுப்பிரமணியம், சாவித்ரி, செல்வக்குமார், கிருஷ்ணவேணி, சாமிநாதன், மாதேஸ்வரி, குருசாமி, கோதாமணி மற்றும் துணைத்தலைவராக உள்ள வேதநாயகியும் உள்ளனர். 
இந்த நிலையில் நேற்று ஊராட்சியில் மாதாந்திர கூட்டம் ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட வார்டு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், கிருஷ்ணவேணி, செல்வக்குமார், மாதேஸ்வரி ஆகியோர் திடீரென அலுவலகத்தின் தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 
பேச்சுவார்த்தை
இதுபற்றி அறிந்ததும் கோபி வட்டார வளர்ச்சி அதிகாரி சுந்தரவடிவேல் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வார்டு உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அப்போது வட்டார வளர்ச்சி அதிகாரி சுந்தரவடிவேலுவிடம், உறுப்பினர்கள் கூறுகையில், ‘மாதம் தோறும் ஊராட்சியில் நடைபெறும் மாதாந்திர கூட்டம், அவசர கூட்டம் மற்றும் சிறப்பு கூட்டங்களுக்கு சில உறுப்பினர்கள் கலந்து கொள்ளாமல் உள்ளனர். ஆனால் கூட்டம் முடிந்த பிறகு ஏதாவது ஒரு நாளில் வந்து அந்த வார்டு உறுப்பினர்கள் தீர்மான புத்தகத்தில் கையெழுத்திடுகின்றனர். இதனால் மாதாந்திர கூட்டத்தில் கொண்டு வரப்படும் தீர்மானங்கள் போதிய உறுப்பினர்கள் இல்லாமலேயே நிறைவேற்றப்படுகிறது. இதற்கு ஆதரவாக தலைவர் செயல்படுகிறார். தலைவரின் இந்த செயலை கண்டித்து தான் நாங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். எனவே கூட்டத்தில் கலந்து கொள்ளாத வார்டு உறுப்பினர்களுக்கு ஆப்சென்ட் போட வேண்டும். மாதாந்திர கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் உள்ள வார்டு உறுப்பினர்கள், கூட்டம் முடிந்து பல நாட்களுக்கு பிறகு கூட்டத்தில் கலந்து கொண்டதை போன்று கையெழுத்திடுவது குறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் விசாரணை நடத்த வேண்டும்,’ என்றனர். 
பரபரப்பு
இதைத்தொடர்ந்து அங்கிருந்த தீர்மான புத்தகம், அஜெண்டா ஆகியவற்றை வாங்கி வட்டார வளர்ச்சி அதிகாரி சுந்தரவடிவேல் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர், ஊராட்சி தலைவர் ரங்கனிடம் கூறுகையில், ‘கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை என்றால் ஆப்சென்ட் போடவேண்டும்.
இதுகுறித்து ஊராட்சி தலைவர், சம்பந்தப்பட்ட உறுப்பினர்களிடம் விளக்கம் கேட்க வேண்டும்,’ என்றார். இதில் சமாதானம் அடைந்த வார்டு உறுப்பினர்கள் 4 பேரும் தங்களுடைய தர்ணா போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். ஊராட்சி அலுவலகத்தில் 4 மணி நேரம் வார்டு உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால்  பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்