திருப்பரங்குன்றம் மலையில் பிரியாணியுடன் ஏற முயற்சி; கேரளாவை சேர்ந்தவர்களை தடுத்து நிறுத்திய போலீசார்

மலை அருகே பாதுகாப்புப்பணியில் இருந்த போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.;

Update:2025-12-26 19:11 IST

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடு திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ளது. திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உள்ள மலை மீது அமைந்துள்ள தீபத்தூணில் இந்த ஆண்டு முதல் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை கடந்த 1ம் தேதி உத்தரவிட்டது. ஆனால், ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டும் கார்த்திகை தீபத்தினமான 3ம் தேதி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. அதற்கு மாறாக மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என கூறி தீபம் ஏற்ற தமிழக அரசு மறுத்துள்ளது. தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை எதிர்த்து தமிழக அரசு மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீடு தொடர்பான வழக்கு மதுரை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் பாதுஷா தர்கா உள்ளது. இந்த தர்காவில் வரும் 6ம் தேதி சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது. மலை மீது உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன்படி, கடந்த 21ம் தேதி சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலையில் இன்று கேரளாவை சேர்ந்த இஸ்லாமிய மதத்தினர் பிரியாணியுடன் ஏற முயன்றனர். மலையில் உள்ள தர்காவுக்கு பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவுகளை எடுத்து செல்ல முயன்றுள்ளனர்.

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் 60க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் மலையில் உள்ள தர்காவுக்கு செல்ல முயற்சித்துள்ளனர். அவர்கள் மலையில் வைத்து அசைவ உணவு சாப்பிட பிரியாணி உள்ளிட்ட உணவுகளை எடுத்து சென்றுள்ளனர்.

அப்போது, மலை அருகே பாதுகாப்புப்பணியில் இருந்த போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது வாலிகளில் பிரியாணி கொண்டு வரப்பட்டதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அசைவ உணவை மலைக்கு கொண்டு செல்ல அனுமதில்லை என கூறினர். இதையடுத்து கேரள இஸ்லாமியர்கள் பிரியாணியை திருப்பி எடுத்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

Tags:    

மேலும் செய்திகள்