10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஒப்பந்த ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்க - ராமதாஸ்
7 ஆண்டுகளுக்கு மேலாக உயர்த்தப்படாமல் உள்ள ஊதியத்தை உயர்த்தி வழங்கிட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.;
சென்னை,
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னை அண்ணா பல்கலைக்கழகம், உலகப்புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களில் முக்கியமானதாகும். தமிழ்நாடு முழுவதும் இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 16 உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் கடந்த 14 ஆண்டுகளாகவே தற்காலிக உதவி பேராசிரியர்கள் தான் பெரும்பாலும் பணியாற்றுகின்றனர். அவ்வாறு 290 ஒப்பந்த உதவி பேராசிரியர்கள் தற்போது பணியாற்றுகின்றனர் இவர்கள் பல்கலைக்கழக நிதிக்குழு மற்றும் ஆட்சி மன்றக் குழுவால் நியமிக்கப்பட்டவர்கள். இவர்கள் தங்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததன் அடிப்படையில் கடந்த 9.11.2020 அன்று நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் பல்கலைக்கழகத்தால் புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்படும் போது தற்காலிகமாக பணியாற்றும் பேராசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கி பணி நிரந்தரப் படுத்தப்பட வேண்டும் என தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பினை வரவேற்றும், தற்காலிக உதவி பேராசிரியர்களை உடனே பணி நிலைப்பு செய்ய வேண்டும் எனவும் கடந்த 12.11.2020 அன்று வலியுறுத்தியிருந்தேன்.
ஆனால் பல்கலைக்கழக நிர்வாகமானது அந்த தீர்ப்பினை எதிர்த்து 2 நீதிபதிகள் அமர்வில் மேல் முறையீடு செய்ததனால் கடந்த ஏப்ரல் மாதம் நீதியரசர்கள் அனிதா சுமந்தன், அருள் முருகன் தலைமையிலான அமர்வும் தற்காலிக பேராசிரியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் எனவும், அவர்களுக்கான ஊதியத்தினை பல்கலைக்கழக மானியக் குழு விதியின் படியும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படியும் சமவேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இந்த தீர்ப்பினையும் எதிர்த்து பல்கலைக்கழக நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதேசமயம் உச்ச நீதிமன்றமும் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை உறுதி செய்ததுடன், தற்காலிக உதவி பேராசிரியர்களுக்கு, நிரந்தரப் பேராசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும் எனவும், அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணி அனுபவத்தை கணக்கிட்டு ஊதிய நிலுவைத் தொகை வழங்க வேண்டுமெனவும் கடந்த ஜுலை மாதம் ஆணை பிறப்பித்தது. இந்த தீர்ப்புகளை பல்கலைக்கழக நிர்வாகம் நடைமுறைப்படுத்தாத நிலையில், ஒப்பந்த உதவி பேராசிரியர்கள் சார்பில் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் நீதிபதி இளந்திரையன் உடனடியாக ஒப்பந்த உதவி பேராசிரியர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும் என கடந்த நவம்பர் மாதம் தீர்ப்பளித்துள்ளார்.
தற்காலிக ஆசிரியர்களில் 80 விழுக்காட்டினர் முனைவர் பட்டம் மற்றும் முதுநிலை பொறியியல் பட்டதாரிகள். முறையாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தகுதித் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் நியமிக்கப்பட்டவர்கள். அவர்கள் 10 ஆண்டுகள் முதல் 14 ஆண்டுகளாக இதே பணியில் நீடிக்கின்றனர். 6 மாத ஒப்பந்தத்தில் நியமிக்கப்பட்ட இவர்களை 3 ஆண்டுகளுக்குப் பிறகு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது விதி. ஆனால், 6 மாதங்களுக்கு ஒருமுறை ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு, புதிதாக பணியமர்த்தப்பட்டவர்களைப் போன்று கணக்குக் காட்டி, பணி நிலைப்பு வழங்க மறுத்து வருகிறது அண்ணா பல்கலைக்கழகம். அதன்படி 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் 300 தற்காலிக பேராசிரியர்ளின் பணிகாலமானது வரும் 31.12.2025 அன்றைய தேதியில் முடிவடைகிறது.
எனவே, தமிழக அரசு அவர்களுக்கான நீதிமன்ற தீர்ப்புகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ள மறுசீராய்வு வழக்கினை திரும்ப பெறுவதுடன், அவர்களுக்கு 1.1.2026 முதல் புதிய பணி ஆணை வழங்கிடும்போது, நீதிமன்றங்களின் உத்தரவுகளை பின்பற்றி பணிநிலைப்பு செய்யும் ஆணையாக வழங்கிடவும், 7 ஆண்டுகளுக்கு மேலாக உயர்த்தப்படாமல் உள்ள ஊதியத்தை உயர்த்தி வழங்கிட அரசாணை பிறப்பித்திட வேண்டும் எனவும் தமிழக அரசையும், அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்தையும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.