ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் பெண் வேட்பாளரிடம் வீடு புகுந்து நகை பறிப்பு செஞ்சி அருகே பரபரப்பு

செஞ்சி அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் பெண் வேட்பாளரிடம் வீடு புகுந்து மர்மநபர்கள் நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-10-01 16:52 GMT
செஞ்சி, 
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள நந்திவாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி முல்லைக்கொடி(வயது 31). இவர் நந்திவாடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இருவரும் கிராமத்தில் சுவர் விளம்பரம் எழுதுவதற்காக சென்றனர். அப்போது சுவர் விளம்பரம் எழுதுவதற்கு நீண்ட நேரமானதால், முல்லைக்கொடி மட்டும் தனது வீட்டுக்கு வந்து, தூங்கி கொண்டிருந்தார்.

நகை பறிப்பு

இதை நோட்டமிட்ட 2 மர்மநபர்கள், வீட்டுக்குள் புகுந்து முல்லைக்கொடி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். 

இதுகுறித்து அவர் கஞ்சனூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி  வருகின்றனர். பறிபோன நகையின் மதிப்பு ரூ.1½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடம் பெண் வேட்பாளரிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்