நிரம்பி மறுகால் பாயும் கண்மாய்கள்; ஓடையில் உடைப்பால் வீடுகளை சூழ்ந்த நீர்

மேலூர் பகுதியில் பெய்த கனமழையால் பல கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்கின்றன. ஓடையில் உடைப்பு ஏற்பட்டு வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.;

Update:2021-10-02 01:09 IST
மேலூர்
மேலூர் பகுதியில் பெய்த கனமழையால் பல கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்கின்றன. ஓடையில் உடைப்பு ஏற்பட்டு வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.
கன மழை
மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டு பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவில் ெதாடங்கி மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளில் அதிகாலை வரை மழை பெய்தது.
குறிப்பாக மேலூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் நேற்று அதிகாலை வரை விடிய, விடிய இடி மின்னலுடன் கனமழை கொட்டியது. இதனால் மேலூர் பகுதியில் பல நீர்நிலைகள் நிரம்பின. மேலும் தண்ணீர் வெளியேறி வீடுகளுக்குள்ளும், நெல் பயிர்களிலும் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியது. 
மேலூர் பகுதியில் பல கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. கால்வாய்கள் மற்றும் ஓடைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. 
கண்மாய்கள் நிரம்பின
அழகர்மலை சரிவில் உள்ள புலிப்பட்டியில் 118 மில்லி மீட்டர் மழை கொட்டியது. பெரியாறு-வைகை பாசனத்தில் உள்ள 178 கண்மாய்கள் மட்டுமே தூர்வாரப்பட்டுள்ளது. இதனால் மழை நீரை மட்டுமே நம்பியுள்ள புலிப்பட்டி ஊராட்சி கண்மாய்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக புலிப்பட்டி, மேலவளவு, சேக்கிபட்டி, பட்டூர், கேசம்பட்டி, உப்போடைப்படி உள்ளிட்ட மானாவாரி கிராம மக்கள் தெரிவித்தனர்.
மேலூர் அருகே மேலவளவு கிராமத்தில் உள்ள வேப்பனேரி மறுகால் ஓடையில் உடைப்பு ஏற்பட்டு அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 40 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கின. 
சூரக்குண்டு கிராமத்தில் மாத்திக்கண்மாய் நிரம்பி, ஓடையில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளமாக பெருக்கெடுத்து அப்பகுதி வீடுகளுக்குள் புகுந்தது. தண்ணீர் தொடர்ச்சியாக வெளியேறி வருவதால் மண் சுவரால் கட்டப்பட்ட வீடுகள் இடிந்து விழும் நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அதிகாரிகள் ஆய்வு
மேலூர் தாசில்தார் இளமுருகன், மாவட்ட வேளாண்துறை இயக்குனர் விவேகானந்தன், துணை இயக்குனர் சுப்புராஜ், கொட்டாம்பட்டி வேளாண் உதவி இயக்குனர் மதுரைச்சாமி ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஓடையில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் மணல் மூடை வைத்து அடைக்கும் பணிகளை தீவிரப்படுத்தினர். மேலூர் பகுதியில் மழை. சேத விவரங்களை வருவாய்த்துறையினர் கணக்கீடு செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்