வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருங்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என்று அனைத்துத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அறிவுரை கூறினார்.

Update: 2021-10-02 17:24 GMT
 விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்தும், அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும் தமிழ்நாடு ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சியின் முதன்மை செயலாளருமான ஹர்சகாய்மீனா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் டி.மோகன் முன்னிலை வகித்து, மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆேலாசனை நடத்தப் பட்டது. இதையடுத்து மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஹர்சகாய்மீனா பேசியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். மழைநீர் வடிகால் மற்றும் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊரக பகுதிகளில் மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் நடைபெறுவதால் வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் பாதிப்புகள் பெருமளவு கட்டுப்படுத்தப்படும். எனவே வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட கலெக்டர் வழங்கியுள்ள பல்வேறு அறிவுரைகளை அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களும் சரியான முறையில் பின்பற்ற வேண்டும்.
மேலும் பருவமழையின்போது பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சார வாரியம், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கால்நடைத்துறை, வேளாண்மைத்துறை, சுகாதாரத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ஆகிய துறைகளை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் ஒருங்கிணைந்து தங்களுடைய பணிகளை சரிவர மேற்கொள்வதன் மூலம் பருவமழையினால் ஏற்படும் பாதிப்புகளை முழுவதுமாக கட்டுப்படுத்தி பொதுமக்களை காத்திட முடியும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், திண்டிவனம் சப்-கலெக்டர் அமித், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்