தர்மபுரியில் காந்தி பிறந்தநாள் விழா கலெக்டர் மலர் தூவி மரியாதை

தர்மபுரியில் காந்தி பிறந்த நாள் விழாவையொட்டி அவரது உருவப்படத்திற்கு கலெக்டர் திவ்யதர்சினி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Update: 2021-10-02 17:24 GMT
தர்மபுரி:
தர்மபுரியில் காந்தி பிறந்த நாள் விழாவையொட்டி அவரது உருவப்படத்திற்கு கலெக்டர் திவ்யதர்சினி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
காந்தி பிறந்தநாள்
 காந்தி பிறந்த நாள் விழா மற்றும் தீபாவளி சிறப்பு கதர் தள்ளுபடி விற்பனை தொடக்கவிழா தர்மபுரி காதி கிராப்ட் வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கி காந்தியடிகள் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் தீபாவளி சிறப்பு கதர் விற்பனையை கலெக்டர் தொடங்கி வைத்து பேசினார். 
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் கதர் விற்பனையை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு கதர் விற்பனைக்கென கதர், பட்டு, பாலிஸ்டர் ரகங்களுக்கு 30 சதவீதமும், உல்லன் ரகங்களுக்கு 20 சதவீதமும் சிறப்பு தள்ளுபடி அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் கதர் விற்பனைக்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் ரூ.20 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் தீபாவளி சிறப்பு விற்பனை குறியீடாக ரூ.20 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விற்பனை நிலையங்கள்
தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தால் தயாரிக்கப்படும் மென்மையான கதர், கண்கவர் பட்டு மற்றும் வண்ண பாலிஸ்டர் போன்ற உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் வாடிக்கையாளர்களின் தேவையை முழு அளவில் பூர்த்தி செய்திடும் நோக்குடன் கதர் கிராம உற்பத்தி பொருட்களும் தருவிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாண்டும் தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும் தற்காலிக கதர் விற்பனை நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் கதர் விற்பனை தொடர்பாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வசதிக்காக 10 சம தவணைகளில் கதர் துணிகள் கடன் முறையில் விற்பனை செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் கதர் ஆடையை வாங்கி நெசவாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிட வைக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி காதி கிராப்ட் விற்பனை அங்காடி மேலாளர் பாலசுப்பிரமணியம், தாசில்தார் ராஜராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்