முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடக்கம்

ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது.

Update: 2021-10-04 14:50 GMT
ஊட்டி

ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது.

நேரடி வகுப்புகள்

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை, முதுகலையில் 18 பாடப்பிரிவுகள் உள்ளன. நடப்பாண்டில் கொரோனா பரவல் காரணமாக 4 மாதங்களுக்கு பிறகு கடந்த மாதம் 1-ந் தேதி முதல் இளங்கலை 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு, முதுகலை 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

முதலாமாண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடந்ததோடு, கலந்தாய்வு நேரில் நடத்தப்பட்டது. 1,300 இடங்களுக்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.

கலந்தாய்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது. முதுகலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்தநிலையில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நேற்று முதல் தொடங்கியது.

80 சதவீத மாணவர்கள்

ஊட்டி அரசு கலைக்கல்லூரிக்கு வந்த முதலாமாண்டு மாணவர்கள் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

வகுப்பறைகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து மாணவர்கள் அமர வைக்கப்பட்டனர். பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மாணவர்களுக்கு பாடங்களை கற்பித்து வருகின்றனர்.முதல் நாளில் 80 சதவீத மாணவர்கள் மட்டும் கல்லூரிக்கு வருகை தந்தனர். 

அதேபோல் பிற கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கி இருக்கிறது. கல்லூரிகளில் மாணவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஆன்லைன் வகுப்பு

ஏற்கனவே ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் பணிபுரிந்து வரும் கவுரவ விரிவுரையாளருக்கு கொரோனா உறுதியானது. தொடர்ந்து 154 பேருக்கு பரிசோதனை மேற்கொண்தில், மேலும் 2 பேராசிரியர்கள், 2 கவுரவ விரிவுரையாளர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கல்லூரி மூடப்பட்டு, மாணவர்கள் வரவேண்டாம் என்று அறிவிக்கப்பட்டது. 

அவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு எடுக்கப்பட்டது. ஒரு வார கல்லூரி விடுமுறைக்கு பிறகு நேற்று இளங்கலை 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்