குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: மக்களவை காலவரையறையின்றி ஒத்திவைப்பு
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1-ம் தேதி தொடங்கியது.;
புதுடெல்லி,
இந்தியாவில் ஆண்டுக்கு மூன்று முறை நாடாளுமன்றம் கூட்டப்படுவது வழக்கம். ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடர் இரு பாகங்களாக நடத்தப்படும். இதில் ஜனாதிபதி உரை, பட்ஜெட் தாக்கல், நிறைவேற்றம், மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள், நிதி மசோதா உள்ளிட்டவை இடம்பெறும்.
அடுத்ததாக மழைக்கால கூட்டத்தொடர், மூன்றாவதாக குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும். இந்த கூட்டத்தொடர்களில் பெரும்பாலும் மசோதாக்கள் நிறைவேற்றம் உள்ளிட்ட அரசு அலுவல்களே பிரதானமாக இடம்பெறும். அதன்படி, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. .19-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தொடரின் முதல் இரண்டு நாட்கள் அமளியில் முடிந்தாலும், 3-ம் தேதி முதல் ஆக்கபூர்வமாக நிகழ்வுகள் நடைபெற்றன. வந்தே மாதரம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், டெல்லி காற்று மாசு, திருப்பரங்குன்றம் விவகாரம் ஆகியவை குறித்தும் காரசார விவாதங்கள் நடைபெற்றன.
இதிலும் முக்கிய மசோதாவான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டதிட்டத்தின் பெயரை “விக்சித் பாரத் - ரோஜ்கர் மற்றும் அஜீவிகா மிஷன் (கிராமின்”) அதாவது விபி-ஜி ராம் ஜி திட்டம் என மாற்றி மக்களவையில் நேற்று மசோதா நிறைவேறியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனை தொடர்ந்து நிலையான அணுசக்தி பயன்பாடு மற்றும் முன்னேற்றம் குறித்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் (19-ம் தேதி ) நிறைவு பெற்றதுடன் மக்களவை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம்.பிர்லா அறிவித்துள்ளார். அவை கூடியதும் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்ட பிறகு அவை ஒத்திவைக்கப்பட்டது.