மண்டபம் கடற்கரை பூங்காவிலும் சுற்றுலா படகு போக்குவரத்தை தொடங்க கோரிக்கை

தமிழகம் முழுவதும் சுற்றுலா படகு போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளதால் மண்டபம் கடற்கரை பூங்காவிலும் சுற்றுலா படகு போக்குவரத்தை தொடங்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-10-04 18:39 GMT
பனைக்குளம், 
தமிழகம் முழுவதும் சுற்றுலா படகு போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளதால் மண்டபம் கடற்கரை பூங்காவிலும் சுற்றுலா படகு போக்குவரத்தை தொடங்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கடற்கரை பூங்கா
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பாலத்தின் நுழைவு பகுதியில் உள்ளது மண்டபம் கடற்கரை பூங்கா. மண்டபம் கடற்கரை பூங்காவிற்கு ராமேசுவரம் வந்து செல்லும் ஏராள மான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மேலும் கடல் மற்றும் கடற்கரை அழகை பார்த்து ரசிக்கும் விதமாக கடற்கரையோரம் நிழற்குடையுடன் கூடிய ஏராளமான இருக்கைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
தமிழகம் முழுவதும் கொரோனா குறைந்து வருவதன் எதிரொலியாக அனைத்து இடங்களிலும் சுற்றுலா படகு போக்குவரத்து கடந்த 2 வாரத்திற்கு முன்பு இருந்தே தொடங்கப்பட்டு உள்ளன.  ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள காரங்காட்டில் வனத்துறை சார்பிலும் கீழக்கரை பகுதியிலும் சுற்றுலா படகு போக்குவரத்து சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மண்டபம் கடற்கரை பூங்கா திறக்கப்பட்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையிலும் இதுவரையிலும் கடற்கரை பூங்காவில் உள்ள கண்ணாடிஇழை சுற்றுலா படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. கண்ணாடி இழை பைபர் படகும் கடற்கரை பூங்காவில் கரையில் ஏற்றி வைக்கப்பட்டு காட்சி பொருளாக உள்ளது.
கோரிக்கை
 இதனால் கடற்கரை பூங்காவிற்கு வந்து செல்லும் ஏராள மான சுற்றுலா பயணிகள் கடலில் உள்ள பவளப்பாறைகள் பாம்பன் பாலத்தையும் பார்த்து ரசிக்க முடியாமல் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். 
எனவே மண்டபம் கடற்கரை பூங்காவில் உள்ள சுற்றுலா படகு போக்குவரத்தை தொடங்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்