ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உலா வந்த யானை

ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உலா வந்த யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-10-05 01:03 GMT
தாளவாடி
ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உலா வந்த யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலையில் யானை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஆசனூர், தலமலை, தாளவாடி, கேர்மாளம் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இங்கு திண்டுக்கல்லில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.
 ஆசனூர் வனப்பகுதியில் உள்ள யானைகள் அவ்வப்போது தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வது வழக்கம். தற்போது வனப்பகுதியில் நல்ல மழை பெய்து பசுமையாகவும் காணப்படுகிறது. இந்த நிலையில் ஆசனூர் வனப்பகுதியில் இருந்து ஒற்றை யானை அரேபாளையம் பிரிவில் இருந்து திம்பம் செல்லும் சாலைக்கு நேற்று காலை வந்து நின்றது. இதனால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை.
போக்குவரத்து பாதிப்பு
யானையை பார்த்ததும் சற்று தூரத்திலேயே தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டனர். யானை ரோட்டில் அங்கும் இங்குமாக உலா வருவதும், நடுரோட்டில் நிற்பதுமாக இருந்தது. இதனை வாகனங்களில் இருந்தபடியே ஒரு சிலர் தங்கள் செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.
சிறிது நேரத்துக்கு பிறகு யானை தானாகவே வனப்பகுதிக்குள் சென்றது. அதன்பின்னரே வாகனங்கள் அங்கிருந்து சென்றன. இதனால் அந்த சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்