கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திருட்டுபோன 101 செல்போன்கள் மீட்பு-போலீஸ் சூப்பிரண்டு தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திருட்டுபோன ரூ.16 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான 101 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் தெரிவித்தார்.

Update: 2022-05-18 16:48 GMT
கிருஷ்ணகிரி:
101 செல்போன்கள் மீட்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு நபர்களிடம் இருந்து திருடப்பட்ட செல்போன்கள் மீட்கப்பட்டன. இதனை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. அவற்றை போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உரியவர்களிடம் ஒப்படைத்தார். 
அப்போது அவர் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2022-ம் ஆண்டில் திருடப்பட்ட செல்போன்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி இணையவழி குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தியதில், ரூ.16 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான 101 செல்போன்கள் மீட்கப்பட்டு, அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
60 துப்பாக்கிகள்
பொதுமக்கள் அடையாளம் தெரியாத நபர்கள் மற்றும் செல்போன் கடைகளில் ரசீது இல்லாமலும், குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் நபர்களிடமிருந்தும் செல்போன்களை வாங்கி ஏமாற வேண்டாம். மாவட்டத்தில் நிலஅபகரிப்பு, மோசடி செய்தல், பணம் இரட்டிப்பு மோசடி, சீட்டு மோசடி போன்ற செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
உரிய அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் என ஏற்கனவே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன்படி கடந்த 10-ந் தேதி வரை ஊர்பொதுமக்கள் மற்றும் ஊராட்சி தலைவர்கள் மூலம் 61 உரிமம் இல்லாத துப்பாக்கிகள் போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உரிமம் இல்லாத துப்பாக்கி வைத்திருப்பவர்கள் ஒப்படைக்க ஏதுவாக வருகிற 31-ந் தேதிக்குள் காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 
கடும் நடவடிக்கை
தாமாக முன்வந்து துப்பாக்கிகளை ஒப்படைக்கும் நபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. அடுத்த மாதம் முதல் மாவட்டம் முழுவதும் சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்படும். அப்போது உரிமம் இல்லாத துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக செல்போன்களை உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஒப்படைக்கும் போது, அவர்களுக்கு மரக்கன்றுகளையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கு, இன்ஸ்பெக்டர்கள் காந்திமதி, சசிகலா, சப்-இன்ஸ்பெக்டர்கள் அருண், சந்துரு ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்