கச்சிராயப்பாளையம் அருகே மினிலாரியில் இருந்து தவறி விழுந்த சிறுவன் சாவு

கச்சிராயப்பாளையம் அருகே மினிலாரியில் இருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தான்.

Update: 2022-05-18 16:50 GMT
கச்சிராயப்பாளையம், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை நடுமதூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி மகன் பரமேஸ்வரன் (வயது 22). வியாபாரியான இவர் மினிலாரி மூலம் கல்வராயன்மலை கிராமங்களில் தக்காளி வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று பரமேஸ்வரன் தக்காளி வாங்குவதற்காக கெங்கப்பாடி கிராமத்துக்கு மினிலாரியில் சென்றார். பின்னர் அவர் அங்கு தக்காளியை வாங்கி மினிலாரியில் ஏற்றிக் கொண்டு சொந்த ஊருக்கு புறப்பட முயன்றார். அந்த சமயத்தில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த அதேஊரை சேர்ந்த லோகநாதன் மகன் உதயகுமார்(7) மினிலாரியின் பின்னால் ஏறினான். இதை கவனிக்காத பரமேஸ்வரன் மினிலாரியை இயக்கினார். அப்போது மினிலாரியில் இருந்து உதயகுமார் தவறி கீழேவிழுந்து விட்டான். இதில் பலத்த காயமடைந்த அவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உதயகுமார் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்த புகாரின்பேரில் கரியாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்