வாகன சோதனையில் ரூ.2¾ கோடி ரொக்கம், சேலைகள் பறிமுதல் தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை

தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.2¾ கோடி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 250 சேலைகளும் சிக்கின.

Update: 2019-03-26 23:15 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகே ஆதிலட்சுமிபுரம் சோதனை சாவடி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ரூ.20 லட்சம் இருந்தது.

விசாரணையில் அந்த வேன், திண்டுக்கல் நாகல் நகரில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து ஆத்தூர் வங்கி கிளைக்கு அந்த பணத்தை கொண்டு செல்வது தெரியவந்தது. மேலும் பணத்துக்கான ஆவணங்களை காட்டும்படி அதிகாரிகள் கேட்டனர். ஆனால் அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இதேபோல் திண்டுக்கல் அருகே பாலம்ராஜாக்காப்பட்டி அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தினர். அந்த வேனில் 5 பேர் இருந்தனர். தொடர்ந்து அவர்களிடம் அதிகாரிகள் விசாரித்தனர்.

அப்போது, மதுரை கிருஷ்ணாபுரத்தில் உள்ள தனியார் வங்கி கிளையில் இருந்து ரூ.2 கோடியே 54 லட்சத்தை எடுத்துக்கொண்டு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வங்கி கிளைக்கு செல்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை எடுத்துச்செல்வதற்கான ஆவணங்களை காட்டும்படி அதிகாரிகள் கேட்டனர். ஆனால் அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து மேற்கு தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

சேலம் இரும்பாலை ரோட்டில் நேற்று இரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை மறித்து அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.3 லட்சம் மதிப்பிலான 250 சேலைகள் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த சேலைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் தேர்தல் பறக்கும்படை சோதனையில் சுமார் ரூ.22 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 9 கிலோ வெள்ளிக்கட்டிகளும் சிக்கின.

மேலும் செய்திகள்