ஹெலிகாப்டர் பேர ஊழல்: சோனியா காந்திக்கு எந்த தொடர்பும் இல்லை முன்னாள் ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி பேட்டி

ஹெலிகாப்டர் பேர ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எந்த தொடர்பும் இல்லை என்று முன்னாள் ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி கூறினார். ஹெலிகாப்டர் பேர ஊழல் முன்பு காங்கிரஸ் ஆட்சியின் போது ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் போன்ற மிகமிக முக்கிய பிர

Update: 2016-12-15 22:30 GMT

புதுடெல்லி,

ஹெலிகாப்டர் பேர ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எந்த தொடர்பும் இல்லை என்று முன்னாள் ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி கூறினார்.

ஹெலிகாப்டர் பேர ஊழல்

முன்பு காங்கிரஸ் ஆட்சியின் போது ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் போன்ற மிகமிக முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்காக இத்தாலியின் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.3,600 கோடிக்கு ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டதில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

ஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர்பாக விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

ஏ.கே.அந்தோணி

இந்த ஊழல் விவகாரத்தில் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது முக்கிய பொறுப்பில் இருந்த சிலருக்கு தொடர்பு இருப்பதாக பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகி இருந்தது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது ராணுவ மந்திரியாக இருந்தவருமான ஏ.கே.அந்தோணியிடம் நேற்று நிருபர்கள் கருத்து கேட்டனர்.

அப்போது அவர் கூறியதாவது:–

சோனியாவுக்கு தொடர்பு இல்லை

மிகமிக முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்ய ரஷிய தயாரிப்பு ஹெலிகாப்டர்கள் பாதுகாப்பானவை அல்ல என தெரியவந்ததால், இத்தாலியின் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் போன்ற மிகமிக முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்காக இந்த ஹெலிகாப்டர்களை வாங்க தீர்மானிக்கப்பட்டது.

இந்திய விமானப்படைதான் இதுபற்றிய முடிவை எடுத்தது. இதில் சோனியா காந்திக்கு எந்த தொடர்பும் கிடையாது. இதை இத்தாலி கோர்ட்டும் தெளிவுபடுத்தி இருக்கிறது. இந்த பிரச்சினையில் தேவை இல்லாமல் சோனியா காந்தியின் பெயரை பாரதீய ஜனதா கட்சியினர் இழுத்தால் அவர்கள் பரிகாசத்துக்கு உள்ளாக நேரிடும்.

வருத்தம்

ஹெலிகாப்டர் பேர விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இன்னும் 2 மாதங்களில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என பாரதீய ஜனதா கூறுகிறது. இது சரி அல்ல.

பாரதீய ஜனதா கட்சியினர் பேசுவதை வைத்துப்பார்த்தால் அவர்களுடைய உத்தரவின்படியே சி.பி.ஐ. செயல்படுகிறது என்பது தெரிகிறது. இதனால்தான் அவர்கள் அப்படி சொல்கிறார்கள். இது மிகவும் வருத்தம் அளிப்பதாக உள்ளது. சி.பி.ஐ.யின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஏ.கே.அந்தோணி கூறினார்.

மேலும் செய்திகள்