மத்திய மந்திரி அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

கூட்டணி, தொகுதி பங்கீடு விவகாரங்கள் குறித்து இருவரும் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.;

Update:2026-01-08 00:32 IST

புதுடெல்லி,

சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. முழு வீச்சில் தயாராகி வருகிறது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. மீண்டும் இணைந்தது. கடந்த ஏப்ரல் மாதம் 11-ந் தேதி மத்திய மந்திரி அமித்ஷா முன்னிலையில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி முடிவானது.

இதையடுத்து தமிழகத்தில் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மத்திய மந்திரி பியூஸ் கோயல் தலைமையிலான குழுவை பா.ஜனதா தேசிய தலைமை அமைத்தது. அந்த குழுவினர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனை தொடர்ந்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார். அப்போது அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திருச்சியில் அவரை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் அமித்ஷா, கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளை 10 நாட்களுக்குள் இறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி நேற்று இணைந்தது. வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.-பா.ம.க. இடையிலான தேர்தல் கூட்டணி உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கையாக என்னவெல்லாம் செய்வது? என்பது பற்றி உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் ஆலோசிப்பதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்றார்.

இந்த நிலையில் இரவு 10.15 மணியளவில் டெல்லி கிருஷ்ணமேனன் மார்க்கில் உள்ள மத்திய மந்திரி அமித்ஷாவின் இல்லத்துக்கு எடப்பாடி பழனிசாமி சென்றார். அங்கு அடுத்த சில நிமிடங்களில் அமித்ஷாவுடன் சந்திப்பு நடந்தது. கூட்டணி விவகாரங்கள், தொகுதி பங்கீடு விவகாரங்கள், இன்னும் கூட்டணியில் இடம்பெற வருகை தரும் கட்சிகள் பற்றிய விவரங்கள் பற்றி அவர்கள் பேசியுள்ளனர்.

மேலும் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் பல்வேறு துறைகளில் ரூ.4 லட்சம் கோடிக்கு ஊழல் நடந்ததாக கவர்னர் ஆர்.என்.ரவியிடம் எடப்பாடி பழனிசாமி அளித்த அறிக்கை பற்றியும் அமித்ஷாவிடம் அவர் விரிவாக எடுத்துக்கூறியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அடுத்த மேல் கட்ட நடவடிக்கைகள் பற்றி அவர்கள் ஆராய்ந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்