மராட்டிய ஐ.டி. நிறுவனத்தில் பயங்கரம் கேரள பெண் என்ஜினீயர் படுகொலை

மராட்டிய ஐ.டி. நிறுவனத்தில் கேரள பெண் என்ஜினீயர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அலுவலக பாதுகாவலரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-01-30 23:15 GMT
புனே,

மராட்டிய ஐ.டி. நிறுவனத்தில் கேரள பெண் என்ஜினீயர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அலுவலக பாதுகாவலரை போலீசார் கைது செய்தனர்.

சாப்ட்வேர்
என்ஜினீயர்

மராட்டிய மாநிலம் புனே நகருக்கு அருகே உள்ள ஹிஞ்சேவாடியில் இன்போசிஸ் ஐ.டி. நிறுவனம் உள்ளது. இங்கு கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த இளம்பெண் ரசிலா ராஜூ (வயது 23), சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவர் வழக்கம் போல நேற்று முன்தினம் மதியம் அங்கு பணிக்கு சென்றார்.

ஒரு பணி தொடர்பாக பேசுவதற்காக ரசிலாவின் மேலதிகாரி அவரை மாலையில் தொலைபேசியில் அழைத்தார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர், நிறுவன பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அவர்கள் ரசிலா ராஜூவை பார்க்க சென்றனர்.

முகத்தில் காயங்கள்

அப்போது நிறுவனத்தின் 9–வது மாடியில் உள்ள மாநாட்டு அறையில் ரசிலா இறந்து கிடந்தார். அவரை கம்ப்யூட்டர் வயரால் யாரோ கழுத்தை இறுக்கிக் கொலை செய்திருந்தது தெரியவந்தது. மேலும் அவரது முகத்திலும் காயங்கள் இருந்தன.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த போலீசார், நிறுவன ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு பாதுகாவலராக பணியாற்றி வரும் அசாமை சேர்ந்த பபென் சைகியா (26) என்பவர், அலுவலகத்துக்குள் நுழைந்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். எனவே அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதை உறுதிப்படுத்தும் விதமாக பபெனும் தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு அலுவலகத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

மும்பையில் கைது

இதைத்தொடர்ந்து போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து பபென் சைகியாவை தேடி வந்தனர். அவரது செல்போன் சிக்னலை பின்தொடர்ந்து சென்ற தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை 3 மணியளவில் மும்பை ரெயில் நிலையத்தில் அவரை கைது செய்தனர்.

பின்னர் அவரை புனேவுக்கு கொண்டு சென்ற போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதுடன், அதற்கான காரணத்தையும் போலீசாரிடம் தெரிவித்தார்.

போலீஸ் காவல்

இது குறித்து போலீசார் கூறுகையில், இளம்பெண் ரசிலாவை, பபென் அடிக்கடி சந்தேகத்துக்கிடமான முறையில் பார்த்துக்கொண்டே இருந்துள்ளார். இதை கடந்த 28–ந் தேதி கடிந்து கொண்ட ரசிலா, இது குறித்து மேலதிகாரிகளிடம் புகார் செய்யப்போவதாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அவர் பணிக்கு வந்தபோது, அவரது அறைக்கு சென்ற பபென் மேலதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டாம் என ரசிலாவிடம் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் இதை ஏற்காத ரசிலா அங்கிருந்து எழுந்து மாநாட்டு அறைக்கு சென்றார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பபென் அவரை பின்தொடர்ந்து சென்று வயரால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளார். பின்னர் அவரது முகத்திலும் காலால் உதைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பபெனை உள்ளூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 4–ந் தேதி வரை போலீஸ் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இந்த கொலை சம்பவம் புனே ஐ.டி. ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்