சந்தேகத்துக்கு இடமாக பணம் டெபாசிட், 18 லட்சம் பேரிடம் விளக்கம் கேட்கிறது வருமான வரித்துறை

ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையின் போது 18 லட்சம் பேர் சந்தேகத்திற்கு இடமாக டெபாசிட் செய்து உள்ளனர் என சிபிடிஐ கண்டுபிடித்து உள்ளது.

Update: 2017-01-31 15:05 GMT
புதுடெல்லி,
 
உயர் மதிப்புடைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின்னர் அதனை டெபாசிட் செய்ய வழங்கப்பட்ட காலக்கெடுக்குள், 18 லட்சம் பேர் சந்தேகத்திற்கு இடமாக டெபாசிட் செய்து உள்ளனர் என வருமான வரித்துறை கண்டுபிடித்து உள்ளது. அவர்களுக்கு பணம் எப்படி கிடைத்தது என்பது தொடர்பாக விளக்கம் கேட்டு எஸ்.எம்.எஸ். மற்றும் இமெயில்கள் அனுப்பபட உள்ளது.
இது தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கையை தவிர்க்க வேண்டும் என்றால் இவர்கள் 10 நாட்களுக்குள் பதிலளிக்கவேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது, அப்படி தவறும் பட்சத்தில் நடவடிக்கை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
மத்திய நேரடி வரிகள் வாரியத்திற்குள் கீழ் செயல்படும் வருமான வரித்துறை சுவாச் தன் அபியான் (பண தூய்மை நடவடிக்கை) என்ற ஆப்ரேஷனை தொடங்கி உள்ளது. மத்திய வருவாய்த்துறை செயலாளர் ஹாஸ்முக் ஆதியா பேசுகையில், சந்தேகத்துக்கு இடம் அளிக்கிற வகையில் டெபாசிட் செய்கிறவர்களிடம் மின்னணு முறையில் விளக்கம் கேட்கப்படுகிறது. அதற்காக சுவாச் தன் அபியான் என்ற சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சாப்ட்வேர் மூலம் டெபாசிட்தாரர்களிடம் பதில்கள் பெறப்படும். அவர்களிடம் பெறப்படுகிற முதல் கட்ட பதில்கள் ஆய்வு செய்யப்படும். 

தேவைப்பட்டால், அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மத்திய நேரடி வரிகள் வாரிய சேர்மன் சுஷில் சந்திரா; சந்தேகத்துக்கு இடம் அளிக்கிற வகையில் டெபாசிட் செய்தவர்களுக்கு இ-மெயில், செல்போன் குறுந்தகவல்கள் வாயிலாக விளக்கம் கேட்கப்படுகிறது. பதில் அளிப்பதற்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான வருமான துறையின் இணையதளத்தில் பதில்களை பதிவு செய்து அனுப்ப வேண்டும். ஆரம்ப கட்டமாக ரூ.5 லட்சம் மற்றும் அதற்கு அதிகமாக டெபாசிட் செய்தவர்கள், சந்தேகத்துக்கு இடம் அளிக்கிற வகையில் ரூ.3 லட்சம் தொடங்கி ரூ.5 லட்சம் வரையில் டெபாசிட் செய்தவர்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படும். 

ஆரம்பத்தில் 18 லட்சம் பேரின் விவரங்கள், மின்னணு முறையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான, வருமான வரித்துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இவர்கள் அனைவரும் தங்கள் வருமானத்துக்கான ஆதாரத்தை தெரிவிக்க வேண்டும்.
சோதித்துப்பார்க்கப்படும். வருமான வரித்துறை மிகப்பெரும் அளவில் தகவல்களை சேகரித்துள்ளது. 1 கோடிக்கும் அதிகமானோர் ரூ.2 லட்சத்துக்கு அதிகமாக டெபாசிட் செய்துள்ளனர். 

இவற்றில் 70 லட்சம் பேரின் பான் எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த தகவல்களை, அவர்களின் வருமான விவரங்கள், விற்றுமுதல் (டேர்ன்ஓவர்), வருமான வரித்துறையின் தகவல் வங்கியிடம் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு பார்த்திருக்கிறோம். வரி செலுத்துகிறவர்களுக்கு எந்த விதமான தொல்லையும் ஏற்படாமல் இருப்பதற்காகவே இந்த திட்டத்தை அமல்படுத்துகிறோம். பொதுமக்கள் அலுவலகத்துக்கு வர தேவையில்லை. இணையதளம் வழியாகவே சோதித்து பார்க்கப்படும் என்றார். 

வருமான வரித்துறையின் இணையதளத்தில் சம்மந்தப்பட்டவர்கள் 10 நாளில் பதில் அளிக்கத்தவறினால், வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்படும் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்