பெண் முதல்-மந்திரி ஒருவர் 24 மணிநேரமும் உழைப்பது சிலருக்கு பிடிக்கவில்லை: ரேகா குப்தா
டெல்லியின் வளர்ச்சிக்காக மத்திய அரசு, துணை நிலை கவர்னர், மாநகராட்சி என அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுகிறார்கள் என ரேகா குப்தா கூறினார்.;
புதுடெல்லி,
டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா தன்னுடைய 11 மாத கடந்த கால அரசின் சாதனைகளை ஒரு விரிவான அறிக்கையாக சட்டசபையில் தாக்கல் செய்து பேசினார்.
அப்போது, இதற்கு முன் நடந்த 11 வருட ஆம் ஆத்மியின் தோல்விகள், தவறான நிர்வாகம் மற்றும் ஊழல் ஆகியவற்றையும் வெளிப்படுத்தினார்.
அவர் சட்டசபையில் பேசும்போது, பெண் முதல்-மந்திரி ஒருவர் 24 மணிநேரமும் உழைக்கிறார் என்ற உண்மை சிலருக்கு பிடிக்கவில்லை. சில சமயங்களில் அவர்கள் அவமதிப்பு செய்கின்றனர். சில சில சமயங்களில் அவர்கள் மலிவான விமர்சனங்களை வெளியிடுகின்றனர். அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் என கூறினார்.
நான் தற்செயலாக பேச கூடிய வார்த்தைகளை வைத்து கொண்டு கேலி செய்கின்றனர். பேசும்போது யார் வேண்டுமென்றாலும் தவறுகளை செய்யலாம். சில வார்த்தைகளை தவறாக உச்சரிக்கலாம். நான் ஒரு தவறு செய்தேன்.
ஆனால், நீங்களோ உள்நோக்கத்துடன் தெரிந்தே செய்கிறீர்கள் என குற்றச்சாட்டாக கூறினார். டெல்லியின் வளர்ச்சிக்காக மத்திய அரசு, துணை நிலை கவர்னர், மாநகராட்சி மற்றும் பல்வேறு அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன என்றும் அப்போது அவர் கூறினார்.