போலி வங்கி கணக்குகள்... நூதன முறையில் ரூ.11 கோடி மோசடி - ஒடிசாவில் கும்பல் கைது
பல கோடி சைபர் மோசடியில் வேறு சில நபர்களுக்கும் தொடர்பு இருக்க கூடும் என போலீசார் சந்தேகம் தெரிவித்து உள்ளனர்.;
பூரி,
ஒடிசாவின் கந்தமால் மாட்டத்தில் தனிநபர்களின் பெயர்களில் போலியாக வங்கி கணக்குகள் தொடங்கி, அவற்றின் உதவியுடன் நூதன முறையில் ரூ.11 கோடி வரை மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுபற்றி உதவி போலீஸ் சூப்பிரெண்டு ராமேந்திர பிரசாத் கூறும்போது, 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள், வெவ்வேறு பெயர்களில் போலியாக வங்கி கணக்குகளை தொடங்கி, சைபர் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, அவர்கள் பயன்படுத்தி கொள்ள உதவியாக அவற்றை கொடுத்து விடுவார்கள் என்றார்.
இதற்கு முன்பு, 22 சைபர் குற்ற வழக்குகளில் ரூ.6 கோடி வரை மோசடி நடந்து உள்ளது. இதில் ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் உள்ள நபர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என தகவல்கள் வெளிவந்தன என கூறினார். இதுதொடர்பாக நடந்த விசாரணையில் மேற்கண்ட திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடமிருந்து பல்வேறு வங்கிகளில் தொடங்க்கப்பட்ட 16 போலி வங்கி வைப்பு கணக்குகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் இருந்து, 8 ஏ.டி.எம். கார்டுகள், ஒரு லேப்டாப், 11 மொபைல் போன்கள் மற்றும் பாஸ்போர்ட் ஒன்று ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த கும்பலில் ஒருவர் ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் செயல்படும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தின் ஊழியராக உள்ளார். துசார்காந்தி தாஸ் என்ற அந்நபருடன், குற்றம் சாட்டப்பட்டவர்களான அபினாஷ் மகபத்ரா, கிரண் குமார் பெஹேரா, கோபால் சிங் மற்றும் பாதல் குமார் ஸ்வைன் ஆகிய 4 பேருக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதுவரை ரூ.11 கோடி வரை மோசடி நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த சைபர் மோசடியில் வேறு சில நபர்களுக்கும் தொடர்பு இருக்க கூடும் என போலீசார் சந்தேகம் தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.