கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: மத்திய மந்திரி ஸ்மிரிதி இராணி கடும் கண்டனம்
கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு மத்திய மந்திரி ஸ்மிரிதி இராணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
கர்நாடகாவில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மந்திரி ஸ்மிரிதி இராணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் ஸ்மிரிதி இராணி வெளியிட்டுள்ள செய்தியில், “ மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. விரைவான விசாரணை நடத்தப்பட்டு நீதி வெளிப்படும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், கேரள முதல் மந்திரி பினராயி விஜயனும் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். பினராயி விஜயன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “ கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இந்தச் சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கைதுசெய்யப்படவேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டது வருத்தமளிக்கிறது. இச்சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. மிகவும் எச்சரிக்கை விடுக்க கூடியதும் ஆகும். இந்த விவகாரத்தில் நீதியை விரும்புகிறோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.