ஒடிசாவில் மீண்டும் பரபரப்பு: என்ஜின் இல்லாமல் 2 கி.மீ. ஓடிய சரக்கு ரெயில்
ஒடிசாவில் என்ஜின் இல்லாமல் 2 கி.மீ. தூரம் சரக்கு ரெயில் ஓடியதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.;
பாலசோர்,
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து ஒடிசா மாநிலம் பூரி நோக்கி 22 பெட்டிகளுடன் கடந்த 7-ந்தேதி எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த ரெயில் ஒடிசாவின் பலங்கிர் மாவட்டம் டிட்லாகார் ரெயில் நிலையத்துக்கு சென்றபோது, ரெயிலில் இருந்த என்ஜினை ஒருமுனையில் இருந்து மற்றொரு முனைக்கு மாற்றுவதற்காக கழற்றினர்.
அப்போது என்ஜின் இல்லாமல் தனியாக இருந்த ரெயில் பெட்டிகள் திடீரென 13 கி.மீ. தூரம் பின்னோக்கி ஓடி பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது ரெயிலில் நூற்றுக்கணக் கான பயணிகள் இருந்தனர்.
இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கடந்த நிலையில் ஒடிசாவில் மேலும் ஒரு ரெயில் என்ஜின் இல்லாமல் 2 கி.மீ. ஓடியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசா மாநிலம் தாமரா என்ற இடத்தில் இருந்து ஜாம்ஷெட்பூர் நோக்கி நிலக்கரி ஏற்றிச்சென்ற சரக்கு ரெயில் ஒன்று நேற்று முன்தினம் இரவு கான்டபடா மற்றும் பகனகா ரெயில் நிலையங்களுக்கு இடையே நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது அந்த ரெயிலில் இருந்த 6 பெட்டிகள் மட்டும் என்ஜின் இல்லாமல் 2 கி.மீ. தூரம் திடீரென ஓடியது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரெயில்வே ஊழியர்கள் உடனடியாக ரெயிலை நிறுத்தினர். இந்த சம்பவத்தால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
என்ஜினையும் பெட்டிகளையும் சரியாக இணைக்காததாலும், தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும் ரெயில் பெட்டிகள் தனியாக ஓடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக 2 மணி நேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.