மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தலில் வன்முறை: 6 பேர் பலி

மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தலில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் 6 பேர் பலியாகியுள்ளனர். #WestBengalPollViolence

Update: 2018-05-14 10:01 GMT
புல்பானி,

மேற்கு வங்காள மாநிலத்தில், ஒரே கட்டமாக இன்று பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்று வருகிறது. நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு நடைபெறும் இந்த பஞ்சாயத்து தேர்தலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதுகாப்புகளை மீறி வடக்கு 24 பர்கானாஸ், பர்த்வான், கூக் பெஹர், தெற்கு 24 பர்கானாஸ் ஆகிய மாவட்டங்களில் வாக்குப்பதிவின்போது வன்முறை ஏற்பட்டுள்ளது.  பாங்கர் பகுதியில் தொலைக்காட்சி நிறுவன வாகனம் ஒன்றை வன்முறையாளர்கள் தீ வைத்து எரித்தனர். கேமராவும் உடைக்கப்பட்டது. அப்பகுதிக்குள் பத்திரிகையாளர்களை செல்ல அனுமதிக்கவில்லை.

இதனிடையே வடக்கு 24 பர்கானாஸ், நடியா, தெற்கு 24 பர்கானாஸ் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் வாக்குப்பதிவின் போது நடந்த வன்முறை சம்பவங்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் முர்ஷிதாபாத் மாவட்டத்தின் சுஜாபூர் கிராமத்தின் வாக்குச்சாவடியில் பயங்கரவாத கும்பலால் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பாராபூர் துணை நிர்வாக அலுவலர் திப்யநாராயண் சட்டர்ஜி கூறியுள்ளார். இந்நிலையில் இறந்தவர் பாஜக கட்சியைச் சேர்ந்த நிர்வாகி என்பது தற்போது தெரிய வந்துள்ளது. 

கூச் பெஹரில் இரு தரப்பினருக்குமிடையே நடந்த மோதல் சம்பவத்தில் குண்டு வெடித்தது. இந்த மோதல் மற்றும் குண்டு வெடிப்பில் வேட்பாளர் உள்பட பலர் காயமடைந்தனர். தேர்தல் வாக்களிப்பின் போது நடந்த இந்த பயங்கரவாத சம்பவங்களால் மாநிலம் முழுவதும் பெரும் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. இதனிடையே பகல் 1 மணி நேர நிலவரப்படி, 41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்