நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை

கர்நாடக சட்டப்பேரவையில் 100 சதவீதம் பெரும்பான்மை பெறுவேன் என்று எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார். #Yeddyurappa #Trustvote;

Update:2018-05-19 09:02 IST
பெங்களூரு,

கர்நாடகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கக்கூடிய அளவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த நிலையில் 104 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பா.ஜனதாவை ஆட்சி அமைக்குமாறு கூறி கவர்னர் அழைப்பு விடுத்தார். மேலும் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க பா.ஜனதாவுக்கு 15 நாட்கள் காலஅவகாசம் வழங்கினார். இது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகள், கவர்னரின் முடிவை எதிர்த்து உடனடியாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பாரதீய ஜனதாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தது சட்ட விரோதம் என்றும், எனவே எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்க தடைவிதிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தனர்.இந்த மனுவை விடிய விடிய விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, எடியூரப்பா பதவி ஏற்பதற்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. என்றாலும் இந்த வழக்கின் தீர்ப்பு அவர் முதல்-மந்திரி பதவியில் நீடிப்பதை கட்டுப்படுத்தும் என்று கூறியது. இதைத்தொடர்ந்து, கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக எடியூரப்பா நேற்று முன்தினம் பதவி ஏற்றார். அவருடன் மந்திரிகள் யாரும் பதவி ஏற்கவில்லை.

இந்த நிலையில், கவர்னரின் முடிவுக்கு எதிராக காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, எஸ்.ஏ.பாப்டே, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காரசாரமான விவாதம் நடைபெற்றது.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், கர்நாடக சட்டசபையில் இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு முதல்-மந்திரி எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதன்படி, இன்று காலை 11 மணிக்கு  கர்நாடக சட்டப்பேரவை கூடுகிறது. எம்.எல்.ஏக்கள் பதவிப்பிரமாணம் முடிந்த பிறகு மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. கர்நாடக அரசியலில் உச்ச கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ள சூழலில்,  பெரும்பான்மையை நிச்சயம் பெறுவேன் என்று கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார். மேலும், தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நாளை முதல் நிறைவேற்றுவேன் எனவும் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்