உலகில் 4-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்தது
உலகில் முதல் பொருளாதார நாடாக அமெரிக்காவும் 2வது இடத்தில் சீனாவும் உள்ளன.;
புதுடெல்லி,
உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்தியா உருவெடுத்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2025-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
4.18 டிரில்லியன் அமெரிக்க டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்புடன் இந்தியா ஜப்பானை முந்தி உலகின் 4-வது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. இந்த சீரான வளர்ச்சியில் சென்றால் 2030-ம் ஆண்டுக்குள் 7.30 டிரில்லியன் அமெரிக்க டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்ற கணிப்புடன் அடுத்த 2.5 முதல் 3 ஆண்டுகளில் ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி இந்தியா 3-வது இடத்தை பிடிக்கும் நிலையில் உள்ளது.
கடந்த 6 காலாண்டை ஒப்பிடும்போது ஜூலை - செப்டம்பர் காலாண்டில் நாட்டின் வளர்ச்சி 8.2 சதவீதமாக அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் 7.8 சதவீதமாக இருந்தது. இது சர்வதேச அளவில் நிலவும் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியிலும் இந்தியாவின் மீள்தன்மையை காட்டுகிறது. இந்தியா, உலகின் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக உள்ளதுடன் இந்த வேகத்தை தக்கவைத்து கொள்ளும் நிலையில் உள்ளது.
தனது சுதந்திரத்தின் நூற்றாண்டு ஆண்டான 2047-ம் ஆண்டுக்குள் உயர் நடுத்தர வருமான அந்தஸ்தை அடையும் லட்சியத்துடன் பொருளாதார வளர்சி, கட்டமைப்பு சீர்திருதங்கள் மற்றும் சமூக முன்னேற்றம் ஆகியவற்றின் வலுவான அடித்தளங்களின் மீது கட்டமைத்து வருகிறது.
வேலையின்மை குறைந்து வருகிறது மற்றும் ஏற்றுமதி செயல்திறன் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளது. உலகில் முதல் பொருளாதார நாடாக அமெரிக்காவும் 2வது இடத்தில் சீனாவும் உள்ளன. 2026-ம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.5 சதவீதமாகவும் இருக்கும் என்று உலக வங்கி கணித்து உள்ளது. அதேபோல 2026-ம் ஆண்டில் இந்திய வளர்ச்சி 6.4 சதவீதமாகவும், 2027-ம் ஆண்டில் 6.5 சதவீதமாக இருக்கும் என்று மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.