கார் விபத்தில் சிக்கிய இசையமைப்பாளர் பாலா பாஸ்கர் ஆஸ்பத்திரியில் அனுமதி - மகள் பலி

கார் விபத்தில் சிக்கிய இசையமைப்பாளர் பாலா பாஸ்கர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.;

Update:2018-09-26 03:00 IST
திருச்சூர்,

கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த மலையாள இசையமைப்பாளர் பாலா பாஸ்கரும் அவரது மனைவியும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மகள் சம்பவ இடத்திலேயே பலியானார்.

பிரபல மலையாள இசையமைப்பாளர் பாலா பாஸ்கர். வயலின் இசைக்கலைஞராகவும் இருக்கிறார். 12 வயதில் இருந்து மேடை கச்சேரிகளில் வயலின் வாசித்து வருகிறார். 17 வயதில் ‘மாங்கல்ய பல்லாக்கு’ என்ற படத்துக்கு இசையமைத்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றதால் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வந்தார்.

பாலா பாஸ்கர் தனது மனைவி லட்சுமி மற்றும் 2 வயது மகள் தேஜஸ்வினியுடன் காரில் திருச்சூரில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அர்ஜுன் என்பவர் காரை ஓட்டினார். கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு காரில் திருவனந்தபுரம் திரும்பிக்கொண்டு இருந்தார்கள். பள்ளிபுரம் என்ற இடத்தில் வந்தபோது திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.

இதில் பால பாஸ்கரும் அவரது மனைவியும் படுகாயம் அடைந்தனர். மகள் தேஜஸ்வினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாலா பாஸ்கரும் அவரது மனைவியும் மீட்கப்பட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருவரது நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளது. டிரைவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

அதிகாலையில் டிரைவர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பாலா பாஸ்கருக்கும் லட்சுமிக்கும் 2000-ல் திருமணம் நடந்தது. திருமணமாகி 16 வருடங்கள் கழித்துத்தான் தேஜஸ்வினி பிறந்தார். பாலா பாஸ்கர் குடும்பத்தோடு விபத்தில் சிக்கியது மலையாள பட உலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகள்