டெல்லியில் அடல் உணவகங்கள் திறப்பு; ரூ.5க்கு மலிவு விலையில் சாப்பாடு
உணவு விநியோகத்திற்கு டிஜிட்டல் டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.;
புதுடெல்லி,
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 101-வது பிறந்த நாளையொட்டி டெல்லி அரசு மலிவு விலையில் சத்தான உணவு வழங்கும் திட்டத்தை அறிவித்து உள்ளது. இதற்காக கடந்த பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. அதன்படி 101 அடல் உணவகங்களை தொடங்கி அதில் ரூ.5-க்கு உணவு வழங்கப்படுகிறது.
முதல்கட்டமாக இன்று ஆர்.கே.புரம், ஜங்புரா, ஷாலிமார் பாக், கிரேட்டர் கைலாஷ் உள்ளிட்ட 45 இடங்களில் அடல் உணவகங்கள் திறக்கப்பட்டு உள்ளது. விரைவில் மேலும் 55 உணவகங்கள் திறக்கப்படும்.ஜங்புரா சட்டமன்றத் தொகுதியின் லஜ்பத் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மந்திரி மனோகர் லால் கட்டார் முன்னிலையில், முதல்- மந்திரி ரேகா குப்தா இந்த உணவகங்களைத் திறந்து வைத்தார். பின்னர் 5 ரூபாய்க்கு டோக்கன் வாங்கி இருவரும் அமர்ந்து உணவு சாப்பிட்டனர்.
இந்த உணவகங்களில் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மதிய உணவு மற்றும் மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை இரவு உணவு ரூ.5-க்கு வழங்கப்படுகிறது. இந்த உணவில் பருப்பு, சாதம், காய்கறிகள் மற்றும் ரொட்டி ஆகியவை இடம்பெறுகிறது.
உணவு விநியோகத்திற்கு டிஜிட்டல் டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. டெல்லி நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் டிஜிட்டல் தளம் மூலம் அனைத்து மையங்களையும் சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.