உன்னாவ் வழக்கில் குல்தீப் செங்காருக்கு ஜாமீன் - டெல்லி ஐகோர்ட்டு முன்பு பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் போராட்டம்

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் மகளிர் அமைப்பினர் டெல்லி ஐகோர்ட்டு முன்பு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2025-12-26 14:13 IST

Image Courtesy : ANI

புதுடெல்லி,

கடந்த 2017-ம் ஆண்டு உத்தர பிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை பாங்கர்மாவ் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் பாலியல் பலாத்காரம் செய்தார் என உள்ளூர் போலீசில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில், குல்தீப் செங்காருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி டெல்லி ஐகோர்ட்டில் குல்தீப் செங்கார் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ரூ.15 லட்சம் பிணைத்தொகை செலுத்தி விட்டு, ஜாமீன் பெற்று செல்லலாம் என்ற நிபந்தனையின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், குல்தீப் செங்காருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை கண்டித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் மகளிர் அமைப்பினர் டெல்லி ஐகோர்ட்டு முன்பு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஐகோர்ட்டு முன்பு போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்றும், ஜந்தர் மந்தர் பகுதியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தினர்.

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் குல்தீப் செங்காருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்தாலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் குல்தீப் செங்காருக்கு 10 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவர் இன்னும் காவலில்தான் வைக்கப்பட்டுள்ளார். அந்த வழக்கு தொடர்பாக குல்தீப் செங்கார் தாக்கல் செய்த மனு டெல்லி ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்