பஞ்சாப்பில் ரெயில் விபத்து நேரிட்ட இடத்தில் உள்ளூர் மக்கள் போராட்டம், விசாரணைக்கு முதல்வர் உத்தரவு

பஞ்சாப்பில் ரெயில் விபத்து நேரிட்ட இடத்தில் உள்ளூர் மக்கள் போராட்டத்தை மேற்கொண்டனர்.

Update: 2018-10-20 07:58 GMT
அமிர்தசரஸ்,

அமிர்தசரஸ் அருகே ஜோதா பதக் என்ற இடத்தில் தசரா கொண்டாட்ட நிகழ்ச்சி ரெயில் தண்டவாளத்துக்கு அருகே உள்ள மைதானத்தில் நடந்தது.  வழக்கம்போல், அங்கு ராவணன் உருவ பொம்மை எரிப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது பட்டாசுகள் வெடித்த போது, தண்டவாளத்தில் நின்றவர்கள் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் ரெயில் ஏறிச்சென்றது. இதில் 61 பேர்  உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். ரெயில்வே தண்டவாளம் பகுதி அனுமதியளிக்கப்படாத பகுதியாகும். ரெயில்வே நிர்வாகத்திடம் அனுமதி கேட்கப்படவில்லை என ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் விபத்து நேரிட்ட பகுதியில் இன்று காலை உள்ளூர் மக்கள் குவிந்து போராட்டம் மேற்கொண்டனர். அவர்கள் பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர், ரெயில் டிரைவருக்கு எதிராக நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். ரெயில் மிகவும் வேகமாக சென்றது, அதிகமான மக்கள் குவிந்திருந்தும் டிரைவர் ரெயிலை கட்டுப்படுத்தவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். பின்னர் போராட்டம் நடத்தியவர்களை போலீஸ், ரெயில்வே தண்டவாளம் பகுதியில் இருந்து வெளியேற்றியது. இதனால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டது.

“தசரா கொண்டாட்டத்திற்கு அரசு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்யாதது ஏன்? இவ்வளவு மக்களை ரெயில்வே தண்டவாளங்களில் அனுமதித்தது எப்படி?” எனவும் போராட்டக்காரர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. 

மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு

இதற்கிடையே விபத்து தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு மாநில முதல்-அமைச்சர் அம்ரிந்தர்சிங் உத்தரவிட்டுள்ளார். ரெயில் விபத்தில் காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய அவர், இன்னும் 4 வாரங்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்