போலி அழகு சாதன பொருட்கள் விற்பனை: இணைய வழி வர்த்தக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் - இந்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறை நடவடிக்கை

போலி அழகு சாதன பொருட்கள் விற்பனை சம்பந்தமாக இந்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறை, இணைய வழி வர்த்தக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

Update: 2018-10-23 18:30 GMT
புதுடெல்லி,

இணையதள வர்த்தகத்தின் மூலம் போலியான, கலப்படம் செய்த மற்றும் அங்கீகரிக்கப்படாத அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை தலைமையகத்துக்கு ஏராளமான புகார்கள் குவிந்தன. இதையடுத்து கடந்த 5, 6-ந்தேதிகளில் மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது உரிய அனுமதி பெறாமல் உள்நாட்டில் தயாரித்த மற்றும் தகுந்த சான்றிதழ்கள் இன்றி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அழகு சாதன பொருட்களை இணையதள வர்த்தகம் மூலம் பல நிறுவனங்கள் விற்பனை செய்திருப்பது, கண்டறியப்பட்டது. இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு கடும் அபராதம் விதிக்க இந்திய தண்டனைச் சட்டத்தில் இடம் உள்ளது.

இதைத்தொடர்ந்து இணையதளம் மூலம் வர்த்தகத்தில் ஈடுபடும் அமேசான் உள்ளிட்ட சில நிறுவனங்களுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டுத்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், இதற்கான பதிலை 10 நாட்களுக்குள் அளிக்கவேண்டும் என்றும் இல்லாவிட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்